

அதிமுக உட்கட்சி தேர்தலில் முதல் கட்டமாக, அண்ணா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் தேர்தல் ஆகஸ்ட் 14-ம் தேதி தொடங்கி 5 கட்டமாக நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் பல்வேறு அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில், உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக,அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் அரசு போக்குவரத்து கழக மண்டலங்கள், பணிமனைகளின் நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில், தமிழக அரசு போக்குவரத்து கழக மண்டலங்கள், பணிமனைகளின் நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 14, 22, 29, செப்டம்பர் 7, 17-ம் தேதிகளில் 5 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதற்கான கால அட்டவணைதனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்குகின்றன.
பொறுப்பாளர்கள் நியமனம்
மண்டலங்கள், பணிமனைகளில் தேர்தல்களை நடத்துவதற்கான கண்காணிப்பாளர்கள், பொறுப்பாளர்கள், பணிமனைகளின் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்தலை முறைப்படி நடத்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்ணா தொழிற்சங்கப் பேரவையை பொருத்தவரை, அதன்மாநில செயலாளர் கமலக்கண்ணன் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் தேர்தலை கண்காணிக்கிறார். கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.