Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் விரைவில் 25 ஆயிரம் களப்பணியாளர்கள் நியமனம்: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

கிருஷ்ணகிரி

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் 25 ஆயிரம் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வினை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆரம்பச் சுகாதார நிலையங்கள், துணைச் சுகாதார நிலையங்களில் இருக்கும் செவிலியர்கள் மற்றும் துணைச் செவிலியர்கள் உட்பட அனைவருக்கும் ஏற்கெனவே, வெளி முகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 15 நாட்களாக பணி செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் தன்னார்வலர்களையும் பயன்படுத்தப் போகிறோம்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைப் பொறுத்தவரை, ஏறத்தாழ மருத்துவம் சார்ந்த 25 ஆயிரம் களப்பணியாளர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் பணியமர்த்த முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். புதிய பணியிடங்கள், ஏற்கெனவே இருக்கும் பணியாளர்கள் என மொத்தம் 25 ஆயிரம் பேர் இக்களப்பணியில் ஈடுபட உள்ளனர்.

ஊட்டச்சத்துப் பரிசுப் பெட்டகத்தைப் பொறுத்தவரை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகக் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், கடந்த ஆட்சிக் காலத்தில் அதில் சுணக்கம் ஏற்பட்டது உண்மை. தமிழக முதல்வர் இந்தத் துறையை ஆய்வு செய்தபோது, ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டமாக இருந்தாலும் அதைத் தொடர்ந்திட வேண்டுமென்று இந்தத் துறைக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அதன்படி கடந்த 10 நாட்களாக எல்லா மருத்துவமனைகளிலும் ஊட்டச்சத்துப் பெட்டகம் தருகின்ற பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி

தடுப்பூசியைப் பொறுத்தவரை மத்திய அரசு வழங்குகின்ற தடுப்பூசி எல்லா மாநிலங்களுக்கும் பிரித்துத் தருகிறார்கள். தமிழக முதல்வரின் தொடர் வேண்டுகோள் காரணமாக கடந்த மாதம் 72 லட்சம் தடுப்பூசி தருவதாக தெரிவித்தனர்.

இந்தியாவிலேயே தமிழகத்துக்குத்தான் கூடுதலாக 19 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு தந்திருக்கிறது. தமிழகத்தின் செயல்திறன் நன்றாக இருப்பதாகக் கூறி, இம்மாதத்துக்கு 79 லட்சம் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

இதுவரையில் வந்திருப்பது 2 கோடியே 39 லட்சம். இன்னும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. கரோனா தடுப்பூசிகள் எங்கும் தட்டுப்பாடு இல்லாமல் எல்லா இடத்திலும் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x