Published : 06 Aug 2021 03:20 AM
Last Updated : 06 Aug 2021 03:20 AM

கோயில் வரவு - செலவு கணக்குகள் ஒரு வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்: அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை

கோயில்களின் வரவு - செலவு கணக்குகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை தங்கசாலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், பைராகிமடம் திருவேங்கடமுடையான் வெங்கடேசப் பெருமாள் கோயில், குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது, கோயில்களின் மேம்பாட்டுக்கான பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தங்கசாலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், பைராகிமடம் பெருமாள் கோயில் ஆகியவை சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்பது கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்துகோயில் சொத்துகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் தரையில் கல்வெட்டுகளை பொறித்து வைத்துள்ளனர். கோயிலுக்கு சொந்தமான இடம், அதன் இருப்பிடம், சர்வே எண் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கோயில்களின் சொத்துகளை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்த இடத்தில் ஆக்கிரமிப்பு இருந்தாலும் மீட்கப்படும். பைராகிமடம் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 142 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அவை ஓரிரு நாளில் மீட்கப்படும்.

ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு, அறம் சார்ந்த பணிகளுக்கும், கோயிலின் வருவாயைப் பெருக்கவும் பயன்படுத்தப்படும்.

கோயிலின் உரிமை ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. கோயில்களின் வரவு - செலவு கணக்கு விவரங்கள் இன்னும் ஒரு வாரத்துக்குள் பதிவேற்றம் செய்யப்படும்.

கரோனா தொற்று அதிகரித்து வருவதால், வரும் 8-ம் தேதி ஆடி அமாவாசை நாளில் கடற்கரை, நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்ய அனுமதி உண்டா, இல்லையா என்பது குறித்து, ஆலோசனை செய்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x