எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இதயநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை கைவிட்டுச் சென்ற பெற்றோர்: தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் குழந்தை நல மருத்துவர்கள்

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இதயநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை கைவிட்டுச் சென்ற பெற்றோர்: தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் குழந்தை நல மருத்துவர்கள்
Updated on
1 min read

இதயநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குழந்தையை பெற்றோர் கைவிட்டுச் சென்றுள்ளனர். இருப்பினும், அந்த குழந்தைக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த ஜூன் 26-ம் தேதி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டதால், அந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக கடந்த மாதம் 3-ம் தேதி சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் பரிசோதித்தபோது, ஆக்சிஜனுடன் கூடிய ரத்தமும், ஆக்சிஜன் இல்லாத ரத்தமும் ஒன்றாகக் கலந்து குழந்தையின் இதயத்தில் இருந்து வெளியேறியது தெரியவந்தது. மேலும் குழந்தையின் உடலில் ஆக்சிஜன் அளவு 70 முதல் 80 என்ற ஆபத்தான நிலையில் இருந்துள்ளது. அதனால் குழந்தை இனி பிழைக்காது என கருதிய பெற்றோர், குழந்தையை ‘டிஸ்சார்ஜ்’ செய்யுமாறு மருத்துவர்களை வற்புறுத்தினர். ஆனால் அதற்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில் குழந்தை தங்களுக்கு வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு, அதன் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆதரவின்றி இருக்கும் குழந்தைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 12 வார கால மருத்துவ கண்காணிப்பை முடித்தவுடன் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து அந்த குழந்தைக்கு தாய்ப்பால் வங்கி மூலம், தாய்ப்பால் வழங்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in