

சிவகங்கை குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் மூலம் இதுவரை 26 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் அந்த குப்பைக் கிடங்கை குறுங் காடுகளாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சிவகங்கை நகராட்சியில் தினமும் 30 டன் குப்பை சேகரமாகிறது. இந்த குப்பைகளை 13.5 ஏக்கரில் அமைந்துள்ள சுந்தரநடப்பு நகராட்சிக் கிடங்கில் கொட்டினர். இங்கு பல ஆயிரம் டன் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்தன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகக் கூறி சுந்தரநடப்பு, துவங்கால், மணக்கரை கிராம மக்கள் குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு, அந்தக் கிடங்கில் குப்பை கொட்டுவதை நகராட்சி நிர்வாகம் நிறுத்தியது. மேலும் குப்பைகளை அகற்றிவிட்டு, அங்கு அடர்ந்த காடுகளை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார். இதையடுத்து பயோ மைனிங் இயந்திரம் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன. இதுவரை 26 ஆயிரம் டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் அனைத்து குப்பைகளும் அகற்றப்பட்டு, மியாவாக்கி முறையில் காடுகள் உருவாக்கப்பட உள்ளன.
இதுகுறித்து நகராட்சி ஆணை யர் அய்யப்பன், சுகாதார அலு வலர் விஜயகுமார் ஆகியோர் கூறியதாவது: பயோ மைனிங் மூலம் பிரிக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை எரிபொருளுக்காக சிமென்ட் நிறுவனங்களுக்கு அனுப்புகிறோம். இதுவரை 30 டன் அனுப்பி உள்ளோம். உரங்களை விவசாயிகளுக்கும், பாட்டில்களை உள்ளூர் வியாபாரிகளுக்கும் கொடுக்கிறோம்.
ஓரிரு மாதங்களில் குப்பைகள் முழுவதும் அழிக்கப்பட்டதும், மியாவாக்கி காடுகள் உருவாக் கப்படும் என்றனர்.