Last Updated : 06 Aug, 2021 03:21 AM

 

Published : 06 Aug 2021 03:21 AM
Last Updated : 06 Aug 2021 03:21 AM

சட்டம், ஒழுங்கு காவல் உதவி ஆணையர்கள் கட்டுப்பாட்டில் மகளிர் காவல் நிலையங்கள்: புதிய நடைமுறையை மாற்றக்கோரும் மதுரை மகளிர் போலீஸார்

மதுரை

மதுரையில் சட்டம், ஒழுங்கு காவல் உதவி ஆணையர்கள் கட்டுப்பாட்டில் மகளிர் காவல் நிலையங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் தங்களின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மகளிர் போலீஸார் தெரிவித்தனர்.

மதுரை நகர், தெற்கு, தல்லாகுளம், திருப்பரங் குன்றம் ஆகிய 4 மகளிர் காவல் நிலையங்களை கூடுதல் உதவி ஆணையர் ஒருவர் கண்காணித்து வருகிறார். இங்கு குடும்பப் பிரச்சினைகள், மகளிர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகமாக வருகின்றன. சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் புகார்கள் மீதான விசாரணையில் தொய்வு ஏற்படுகிறது.

இந்நிலையில், 4 மகளிர் காவல் நிலையங்களும், அந்தந்த பகுதிக்குட்பட்ட சட்டம், ஒழுங்கு காவல் உதவி ஆணையர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது மகளிர் காவல் நிலையங் களின் செயல்பாடுகள் குறித்து சட்டம், ஒழுங்கு உதவி ஆணையரிடம் தினமும் அறிக்கை அளிக்க வேண்டும். முக்கிய வழக்குகள் தொடர்பாக விவாதிக்க வேண்டியுள்ளது. இதனால் மகளிர் போலீஸார் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து மகளிர் போலீஸார் சிலர் கூறியதாவது: கரோனா ஊரடங்கால் மகளிர் காவல்நிலையங்களுக்கு வழக்கத்தைவிட அதிக புகார்கள் வருகின்றன. மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை நாங்கள் விசாரித்து வரும் நிலையில், மற்ற சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்களில் பதிவாகும் போக்ஸோ வழக்கு களிலும் மருத்துவப் பரிசோதனை, கைது போன்ற பிற நடவடிக்கைகளை நாங்கள்தான் கையாள வேண்டியுள்ளது. எஸ்.ஐ.கள், காவலர்கள் பற்றாக் குறையால் எங்கள் பணிச்சுமை அதிகரித்துள்ளது.

மகளிர் சார்ந்த வழக்குகளின் விவரங்களை விரிவாகத் தெரிவிக்க வசதியாக, மகளிர் காவல் நிலையங்களை கவனிக்கும் பொறுப்பை பெண் கூடுதல் உதவி ஆணையரிடம் ஒப்படைக்க வேண் டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில், சட்டம், ஒழுங்கு உதவி ஆணையர்களின் கட்டுப்பாட்டில் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது ஏற்படையது அல்ல. இதனால் கூடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதோடு மகளிர் சார்ந்த வழக்குகளை விசாரிப்பதில் தாமதம் ஏற்படும். எனவே, பெண் காவல் உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் மகளிர் காவல் நிலையங்களை செயல்பட மாநகர காவல் ஆணையர் உத்தரவிட வேண்டும் என்று கூறினர்.

காவல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "தற்போது 4 மகளிர் காவல் நிலையங்களை ஒரு கூடுதல் உதவி ஆணையர் மட்டுமே கவனித்து வருகிறார். இதற்கு பதிலாக, அந்தந்த உட்கோட்ட உதவி ஆணையர்கள் கட்டுப்பாட்டில் மகளிர் காவல் நிலையங்கள் இருந்தால் புகார்கள் மீதான நடவடிக்கை துரிதமாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கலாம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x