

தமிழகத்தில் முதன்முறையாக இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டில் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தது. அதைத் தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் தஞ்சாவூர், திருச்சியில் விவசாயிகளிடம் வேளாண் பட்ஜெட் தொடர்பான கருத்துகளை கடந்த மாதம் கேட்டறிந்தனர்.
இதனிடையே நிகழாண்டுக்கான பட்ஜெட் ஆக.13-ம் தேதியும், அதைத் தொடர்ந்து வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளன. வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து டெல்டா மாவட்டங்களைச் சே்ரந்த விவசாய சங்க நிர்வாகிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியது:
முன்னோடியான தெலங்கானா
நாட்டிலேயே தெலங்கானா மாநிலத்தில் தான் 2020-21-ம் நிதியாண்டில் வேளாண்மைக்கு 15.7 சதவீதமும், 2021-22-ம் நிதியாண்டில் 13.5 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் கடந்த நிதியாண்டில் வேளாண்மைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 6.1 சதவீதம் மட்டுமே. எனவே, இந்த பட்ஜெட்டில் 15 சதவீதத்துக்கு குறையாமல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும், தெலங்கானாவில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், பருவத்துக்கு ரூ.5 ஆயிரம் வீதம் இரு பருவங்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் வேளாண்மை முதலீடு ஆதரவு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதேபோன்று தமிழகத்திலும் குறிப்பாக இயற்கை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
இயற்கை விவசாய ஊக்குவிப்பு
பயிர் சுழற்சி மற்றும் மாற்றுப் பயிர் சாகுபடியில் சிறுதானிய உற்பத்தியை ஊக்கப்படுத்தும் திட்டம், இயற்கை விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்த பண்ணை மகளிர் குழுக்கள், உழவர் ஆர்வலர் குழுக்களை பயன்படுத்தி அங்காடிகளை திறத்தல், பாரம்பரிய மற்றும் உள்நாட்டு விதைகளை அரசே உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகித்தல் ஆகியவற்றை அரசு செய்ய வேண்டும்.
தோட்டக்கலைக்கு முக்கியத்துவம்
தமிழகத்தில் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும். தோட்டக்கலைப் பொருட்களை சேமிக்க குளிர்பதன கிடங்குகள், நெல் சேமிக்க கிடங்குகள் ஆகியவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
கால்நடை வளர்ப்பு
கிராமப்புற மக்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதில் கால்நடை வளர்ப்பு அதிக பங்காற்றுகிறது. எனவே, கால்நடைகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குதல், மேய்ச்சல் நிலங்களை மேம்படுத்தித் தருதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.
தன்னிறைவு கிராமங்கள்
காந்திய பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பாவின் சுதேசி பொருளாதார திட்டங்கள் அடிப்படையில் முதல்கட்டமாக ஒரு மாவட்டத்துக்கு 10 கிராமங்களை தன்னிறைவு, பசுமை கிராமங்களாக அறிவித்து, அங்கு உரிய செயல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
வேளாண் இயந்திரங்கள்
ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களை தூர்வார ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனியார் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை மாற்றி ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தேவையான கனரக இயந்திரங்களை வாங்கி தேவைப்படும் இடங்களில் அரசே தூர்வாருதல் மற்றும் மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
விளைபொருட்களுக்கு உரிய விலை
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் 2006-ல் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீத லாபம் சேர்த்து குறைந்தபட்ச விற்பனை விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசு இதுவரை அமல்படுத்தவில்லை.
எனவே, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், உற்பத்தி செலவுடன் 50 சதவீத லாபம் சேர்த்து வரும் விலைக்கும் உள்ள வித்தியாசத் தொகையை ஊக்கத் தொகையாக தமிழக அரசு வழங்கி விவசாயிகளிடம் விளைபொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால், விவசாயிகள் விவசாயம் செய்வதை கைவிடுவதை தடுப்பதற்கும், உணவுப் பொருட்கள் உற்பத்திக்கும் உத்தரவாதம் கிடைக்கும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.