

திருந்தணி அருகே ஆந்திர பகுதிக்கு செம்மரம் வெட்ட சென்றுக் கொண்டிருந்த கூலி தொழிலாளர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் அதிக ளவில் செம்மரங்கள் வெட்டப் பட்டு கடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களை, பணத்தாசை காட்டி கடத்தல் கும்பல் பயன் படுத்தி வருவதாக புகார் எழுந் துள்ளது. இந்த கடத்தல் கும்பலால் தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் கைது செய்து சிறையில் அடைப்பதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதுமாக பல்வேறு சித்ர வதைக்கு உள்ளாகி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தாக தமிழக தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் செம்மரக் கடத்தல் கும்பலின் ஆசை வார்த்தைகளுக்கு தமிழக தொழிலாளர்கள் இரையாக வேண்டாம் என தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸார் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இருப்பினும், தமிழகத் திலிருந்து கூலி தொழிலாளர்கள் செம்மரக் கடத்தலுக்கு கடத்தல் கும்பலால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழக- ஆந்திரா எல்லை பகுதியில் அமைந்துள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு வழியாக வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சேஷாசலம் வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, செம்மரங்கள் வெட்டப்படுவதும், கடத்துவதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ் சாலையில், திருத்தணி அருகே பொன்பாடி சோதனைச் சாவடி பகுதியில் திருத்தணி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, தமிழகப் பகுதியிலிருந்து ஆந்திரா நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, காரிலிருந்த 8 பேர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை போலீஸார் துரத்திச் சென்றதில் 4 பேர் சிக்கினர். பின்னர் காரை சோதனை செய்தபோது அரிசி, பருப்பு, காய்கறிகள் இருந்தது தெரியவந்தது. போலீஸாரின் தொடர் விசாரணையில், போலீ ஸாரிடம் சிக்கிய 4 பேர், மரம் வெட்டும் கூலி தொழிலாளிகள் என்பது தெரியவந்தது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த மணி(42), வெங்கடேசன்(27), ராஜ மாணிக்கம்(60), அரக்கோணம் அருகே உள்ள பாராஞ்சியை சேர்ந்த ஓட்டுநர் சவுந்தர்(40) என்பதும், அவர்கள் ஏஜெண்ட் ஒருவர் மூலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதிக்கு செம்மரங்கள் வெட்ட சென்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த திருத்தணி போலீஸார் தொழிலாளர்கள் 4 பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய மற்ற 4 பேரை தேடி வருகின்றனர்.