Last Updated : 06 Aug, 2021 03:22 AM

 

Published : 06 Aug 2021 03:22 AM
Last Updated : 06 Aug 2021 03:22 AM

அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் எண்ணிக்கையை உயர்த்த ‘ரேடியோ மூலம் வகுப்பு’ நடத்த புதிய செயலி: அரசு பள்ளி ஆசிரியர்கள் சாதனை

திருப்பத்தூர்

அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் மின்னணு சாதனங்கள் மூலம் கல்வி கற்போரின் எண்ணிக்கையை உயர்த்த ‘ஆன்லைன் கல்வி-ரேடியோவில் வகுப்பு’ என்ற புதிய முயற்சியை திருப்பத்தூர் மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகள் ‘ஆன்லைன்’ மூலம் மாணவர்களுக்கு பாடங் களை நடத்தி வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பாட திட்டங்கள் குறைக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆல் இந்தியா ரேடியோ மூலம் பாடங் களை ஒலி, ஒளிபரப்பு செய்து வருவதாகக் கூறி அதற்கான கால அட்டவணையை மாணவர்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் 30 சதவீ தம் பேர் மட்டுமே ஆன்லைன் வகுப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது போன்ற நிலையை போக்கவும், மாணவர்களுக்கு ரேடியோ மூலம் பாடங்களை நடத்த புதிய செயலி ஒன்றை திருப்பத்தூர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்படுத்தி அதை செயல்படுத்தி யுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங் காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிந்தகாமணி பெண்டா நடுநிலைப் பள்ளியில், பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வரும் அருண்குமார், ஆம்பூர் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களாக சரவணன் மற்றும் ஜெயசீலன் ஆகியோர், ‘‘இன்னோவேடிவ் டீச்சர் டீம்’’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு இணைய வழி பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

கரோனா ஊரடங்கு காரண மாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசுப்பள்ளிகள் திறக்கப் படாத நிலையில், கிராமப்புற மாணவர்களில் கற்றல் திறனை மேம்படுத்த ‘ஆன்லைன் ரேடியோ’மூலம் வகுப்பு எடுத்து வருகின் றனர்.

இது குறித்து அரசு ஆசிரியர் சரவணன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது, ‘‘ஆண்டிராய்டு மொபைல் போனில் ப்ளே ஸ்டோரில் "ஆங்கர்" என்ற செயலியை பயன்படுத்தி, ‘இன்னோவேடிவ் டீச்சர் டீம் திருப்பத்தூர்' என்ற பெயரில், கல்வி வலையொலி (ரேடியோ) ஒன்றை நாங்கள் தொடங்கியுள்ளோம்.

இதில், தினந்தோறும் திருக்குறள், நற்சிந்தனைகள், பழமொழி, விடுகதை, சிறுகதைகள், ஸ்போக்கன் இங்கிலீஷ், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பாடத் திட்டத்தில், ஒவ்வொரு பாடத்துக்கும் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களைக் கொண்டு, ஆடியோ வடிவில் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

கல்வி ரேடியோ தொடங்கிய 2 மாதங்களில், எங்களுடைய லிங்க்கை பயன்படுத்தி 5 ஆயிரத்து 500 மாணவர்கள் ஒலிபரப்பை கவனித்து வருகின்றனர். எங்களது பள்ளியில் உள்ள மாணவர்களில், சராசரி யாக 50 மாணவர்கள் தினசரி நாங்கள் நடத்தும் பாடங்களை கவனித்து வருகின்றனர். 2G வசதியுள்ள செல்போன் வைத்து இருப்பவர்களும் ஆடியோ வடிவில் நடத்தும் பாடங் களை எளிதாகப் பெற இந்த இணைய வழிக்கல்வி ரேடியோ பயனுள்ளதாக உள்ளது.

மாணவர்களுக்கான பாடங் களை பல மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் குழுவாக இணைந்து குரல் பதிவை அனுப்பி வைக்கின்றனர். இதன் மூலம் மின்னனு சாதனங்கள் மூலம் கல்வி கற்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது’’. என்றார்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு திருப் பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, வட்டரக் கல்வி அலுவலர்கள், பெற்றோர் உட்பட பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x