ஈமு கோழி மோசடி: கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜ் உள்ளிட்ட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை

யுவராஜ்: கோப்புப்படம்
யுவராஜ்: கோப்புப்படம்
Updated on
1 min read

சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜுக்கு ஈமு கோழி மோசடி வழக்கில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கோவையில் உள்ள முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) இன்று தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம் அக்கம்மாபேட்டை, ஐவேலி கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் (41), ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த வாசு (52), பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையத்தைச் சேர்ந்த தமிழ்நேசன் (34) ஆகியோர் இணைந்து, 2011-ம் ஆண்டு பெருந்துறையில் 'சுதி ஈமு பார்மஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினர்.

பின்னர், அந்த நிறுவனத்தின் பண்ணை திட்டத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், 6 ஈமு கோழிகள், அதற்குத் தேவையான தீவனம் அளித்து, கொட்டகை அமைத்துக் கொடுப்போம், பராமரிப்புத் தொகையாக 24 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.7 ஆயிரம், ஆண்டு போனஸாக 2 ஆண்டுகளுக்கு ரூ.20,000 அளிப்போம் என்று விளம்பரம் செய்தனர்.

இரண்டாவதாக, விஐபி திட்டத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், நிறுவனமே 6 ஈமு கோழிகளைப் பராமரித்து, முதலீட்டாளர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் வீதம் 24 மாதங்களுக்கு அளிக்கும், ஆண்டு போனஸாக 2 ஆண்டுகளுக்கு ரூ.20,000 அளிப்போம், 24 மாதங்கள் நிறைவடைந்த பிறகு முதலீடு செய்த தொகையைத் திருப்பி அளிப்போம் என்று அறிவித்தனர்.

இதை நம்பி, மொத்தம் 121 பேர் 2.70 கோடி முதலீடு செய்தனர். ஆனால், யாருக்கும் வாக்குறுதி அளித்தபடி பணத்தை அளிக்கவில்லை.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தோக்கவாடியைச் சேர்ந்த டி.பி.பழனிசாமி என்பவர், 2012-ம் ஆண்டு ஈரோடு மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதனடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸார் மூவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஏ.எஸ்.ரவி இன்று (ஆக. 05) தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உட்பட மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, மொத்தம் ரூ.2.47 கோடி அபராதம் விதித்ததோடு, நேரில் ஆஜராகாத தமிழ்நேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

யுவராஜ், சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in