Published : 05 Aug 2021 05:00 PM
Last Updated : 05 Aug 2021 05:00 PM

வட இந்தியாவில் காணாமல் போன 70 வயது மூதாட்டி: 6 மாதம் கழித்து மதுரையில் மீட்பு

மதுரை

வட இந்தியாவில் காணாமல் போன 70 வயது மூதாட்டி மதுரையில் மீட்கப்பட்டு, மீண்டும் அவரது குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம் இந்தூர் நகரில் இருந்து சுமார் 2,000 கிலோ மீட்டர் தொலைவு வழிதவறிவந்த மூதாட்டி ரெகமத் அலீனா (70), மதுரை திருநகரில் ஆதரவின்றிச் சுற்றித் திரிந்துள்ளார். கிழிந்த ஆடையுடன் மிக மோசமான நிலையில் சாலையில் அமர்ந்தபடி இருந்தார். இதைக் கண்ட குழந்தை நல ஆர்வலர் மாரீஸ்வரி, திருநகர் அடைக்கலம் முதியோர் இல்லத்தைத் தொடர்புகொண்டு தெரிவித்தார்.

அடைக்கலம் இல்லம் மீட்புக் குழுவினர் திருநகர் காவல் நிலையத்தை அணுகி, ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு, கடந்த ஜூலை 20-ம் தேதி இரவு அடைக்கலம் முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். இந்தி மட்டுமே தெரிந்த மூதாட்டியிடம், இந்தி தெரிந்த நபர்கள் உதவியுடன் அவர் ஊர் மத்தியப் பிரதேசம் இந்தூர் என்பதும், அவரின் குடும்பத்தினரின் தகவல்களையும் பெற்றனர். மத்தியப் பிரதேசம் இந்தூர் நகரில் ஒரு தேநீர்க் கடையின் உரிமையாளர் மூலம் மூதாட்டியின் குடும்பத்தினரையும் கண்டறிந்தனர்.

அதன்பின் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மதுரைக்கு மூதாட்டியின் பேரன் ஹைதர் அலி மற்றும் உறவினர் முகமது பெரோஸ் இன்று காலை ரயிலில் வந்தனர். திருநகர் அடைக்கலம் முதியோர் இல்லத்திற்கு வந்த பேரன் ஹைதர் அலி, காணாமல் போன தனது பாட்டியைப் பார்த்த மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து நெகிழ்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அடைக்கலம் முதியோர் இல்ல நிர்வாகி விஸ்வா கூறுகையில், ‘‘மூதாட்டியின் பேரனிடம் விசாரித்ததில் அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே காணாமல் போனதாகவும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறினார். எப்போதும் வெளியில் சென்றால் வந்துவிடுவார் என்றும், இது அவர் இரண்டாவது முறை காணாமல் சென்ற நிகழ்வு என்றும் கூறினார். ஆனால், இவ்வளவு தொலைவு அவர் வந்தது இதுவே முதல் முறை.

பின் முறையான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு, திருநகர் காவல் நிலைய ஆய்வாளரிடம் அழைத்துச் சென்றோம். பின்பு ஆவணங்களைச் சமர்ப்பித்து, ஆய்வாளர்களால் விசாரிக்கப்பட்டனர். மூதாட்டியுடன் மூவரும் திரும்பிச் செல்ல மதுரை ரயில் நிலையத்தில் மதுரை - பெக்கானர் தொடர்வண்டியில் பாதுகாப்பாக அமர்த்தி வழியனுப்பினோம்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x