Last Updated : 05 Aug, 2021 02:36 PM

 

Published : 05 Aug 2021 02:36 PM
Last Updated : 05 Aug 2021 02:36 PM

மேகதாது: மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் பதிலால் முடிவுக்கு வரப்போகிறது: அண்ணாமலை

உண்ணாவிரத போராட்டத்துக்கு மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த அண்ணாமலை.

தஞ்சாவூர்

மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் பதிலால் மேகதாது அணை விவகாரம் முடிவுக்கு வரப்போகிறது என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் தஞ்சாவூரில் இன்று (ஆக. 05) காலை மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதம் தொடங்கியது. உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடங்கி வைத்தார். போராட்டத்தில், பாஜக மூத்த நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், ஜி.கே.நாகராஜ், கருப்பு எம்.முருகானந்தம், வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

"தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனைக்காக மாதந்தோறும் ஆய்வுக் கூட்டத்தை கூட்டும் அரசு, விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களுடைய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக, இதுவரை ஒரு ஆய்வு கூட்டமாவது நடத்தி உள்ளார்களா?

தமிழக முதல்வர் சாராயத்துறை அமைச்சரை பக்கத்தில் வைத்துக்கொண்டு, விவசாயத்துறை அமைச்சரை தூரமாக வைத்துள்ளார். இதுவே தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ஒரு சான்று.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எங்களது உண்ணாவிரத போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில், பாஜகவுக்கு வயிற்றில் பிரச்சினை உள்ளது என, கோழைத்தனமாகவும் கேவலமாகவும் பேசுகிறார். அவர் கட்சியை விட்டு, வீட்டுக்கு செல்வதற்கான நேரம் வந்துவிட்டது.

கமல்ஹாசன் நடிப்பின் உச்சபட்சமாக, அரசியல் நடிப்புக்கு வந்துவிட்டார். மய்யம் என்று பெயர் வைத்துக்கொண்டு மய்யம் இல்லாமல் பேசி வருகிறார். அவருடன் இருந்தவர்கள் எல்லாம் வெளியே போய்விட்டனர், இவர் மட்டுமே தற்போது உள்ளார். கடந்த தேர்தலிலேயே மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

கர்நாடகாவில் உள்ள உதயா டிவி சேனல் கலாநிதிமாறன் உடையது. அவரது தம்பி தயாநிதிமாறன் பணத்தை வசூல் செய்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு மனசாட்சியே இல்லாததால் மக்களிடம் சாட்சி சொல்ல முடியாமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள உண்மையான பாஜகவை கொச்சைப்படுத்தினால், அவர்களது அனைத்து விஷயங்களும் வீதிக்கு வந்துவிடும்.

கர்நாடகாவில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் அனைத்து அமைப்பினரும் சேர்ந்து நாம் ஏன் கடிதம் எழுதவேண்டும், மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறி வருகிறார்கள்.

மேகதாதுவில் அணை கட்டினால் கண்டிப்பாக தமிழக பாஜக எதிர்க்கும், அங்கு அணை கட்டக்கூடாது என சட்டம் தெளிவாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாயிகள் பட்டினிச்சாவு அதிமாக நிகழ்ந்தது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்ததும் ஒரு விவசாயி கூட பட்டினியால் சாகவில்லை.

இங்கு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்துள்ள கூட்டம் பிரியாணி பொட்டலங்களுக்கும், டி-சர்ட்டுக்காகவும் வரவில்லை. விவசாயிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், அறப்போராட்டத்துக்காக வந்துள்ளனர்.

தமிழக அரசியலில் யாராவது பாஜகவை கொச்சைப்படுத்தினால் விடமாட்டோம். மீறி பேசினால் அவர்களின் பிசினஸில், அடிப்படையில் கையை வைப்போம். அவர்கள் செய்யும் துரோகத்தை பட்டியலிட்டு பதிலடியை சம்மட்டி அடி போல கொடுப்போம்".

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறுகையில், "நாடாளுமன்ற கூட்டத்தொடரில், கர்நாடக எம்.பி. ஒருவர் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு எப்போது, மத்திய அரசின் அனுமதி வழங்கப்படும் என, கேள்வி எழுப்பிய போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத், மேகதாது திட்ட அறிக்கைக்கு, கடைமடை மாநிலமான தமிழகதத்தின் அனுமதி, காவிரி மேலாண்மை வாரியம் ஒப்புதல் இல்லாமல், மத்திய அரசு அனுமதி அளிக்காது என, திட்டவட்டமாக பதில் அளித்துள்ளார். இதனால் மேகதாதுன் பிரச்சினை முடிவுக்கு வர போகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x