Published : 05 Aug 2021 01:46 PM
Last Updated : 05 Aug 2021 01:46 PM

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரிய வழக்கு; தொழிலைக் குறிப்பிடாதது ஏன்? - நடிகர் தனுஷுக்கு உயர் நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், என்ன பணியில் இருக்கிறீர்கள் எனக் குறிப்பிடாதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்கத் தடை விதித்து, கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்த வழக்கில், உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019-ல் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரி, நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாகச் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து, தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியைச் செலுத்தும் பட்சத்தில் காரைப் பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

30 லட்சத்து 33 ஆயிரத்தைச் செலுத்தியதாக, தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விதிகளைப் பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று (ஆக. 05) விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மீதமுள்ள வரியைத் திங்கட்கிழமைக்குள் (ஆக. 09) செலுத்தத் தயாராக இருப்பதாகவும், அதனால் வழக்கை முடித்துவைக்கும்படியும் கோரிக்கை வைத்தார். வழக்கை வாபஸ் பெறுவதற்காக மெமோ தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

அப்போது, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறுக்கிட்டு, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், என்ன பணி அல்லது தொழிலில் இருக்கிறீர்கள் எனக் குறிப்பிடாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

என்ன வேலை என்பதை ஏன் மறைத்தார் என மனுத்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, பணியையோ அல்லது தொழிலையோ வழக்கு மனுவில் குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா எனக் கேள்வி எழுப்பினார்.

2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, வரியைச் செலுத்திவிட்டு வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாமே எனவும், அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்குப் பிறகும், இதுவரை செலுத்தாத நிலையில், வாபஸ் பெற அனுமதிக்க முடியாது எனவும், இறுதி உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மக்கள் வரிப் பணத்தில் போடும் சாலையைப் பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டியதுதானே எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் அல்லது சோப்பு வாங்கும் பொதுமக்கள் போன்ற ஏழை, நடுத்தர மக்கள் கூட வரி செலுத்திதானே பயன்படுத்துகிறார்கள் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி செலுத்த முடியவில்லை என, அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள் எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஆனால், அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாகச் செலுத்துங்கள் என அறிவுறுத்தினார். எந்த தனிப்பட்ட ஒருவரையும் குற்றம் சாட்ட வேண்டுமென்பது தன் நோக்கம் அல்ல என்றும், அரசு விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள்படி நடக்கும்படியும் அறிவுறுத்தினார்.

நடிகர் தனுஷ் நுழைவு வரி பாக்கி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகவரித் துறை உடனடியாகக் கணக்கிட்டு, இன்று மதியம் 2:15 மணிக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும், கணக்கீடு செய்யும் அதிகாரியும் மதியம் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை இறுதி உத்தரவுக்காக மதியம் தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x