Published : 05 Aug 2021 12:45 PM
Last Updated : 05 Aug 2021 12:45 PM

மேகதாது அணை: கர்நாடக அரசைக் கண்டித்து அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழக முதல்வர், பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்துத் தமிழகத்தின் நிலைப்பாட்டை விளக்கினார்.

மேகதாது அணை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனக் கோரி, அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதினார். தமிழக முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக முதல்வருக்கு பதில் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என, கர்நாடகாவில் பதவியேற்றுள்ள புதிய முதல்வர் பசவராஜ் பொம்மையும் கூறிவருகிறார்.

இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில் தஞ்சாவூரில் இன்று (ஆக. 05) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தஞ்சை சோழர் சிலையில் இருந்து மாட்டு வண்டியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தொண்டர்களுடன் அண்ணா சிலை வரை பேரணியாகப் புறப்பட்டார். பின், தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக பாஜக நிர்வாகிகள் ஈடுபட்டனர். போராட்டத்தைத் தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடங்கி வைத்தார்.
அண்ணாமலை தலைமை வகித்தார். இப்போராட்டத்தில், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேகதாது அணை திட்டத்தைக் கர்நாடக அரசு கைவிட வேண்டும், காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்துக்குத் தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தைத் தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை தமிழக அரசு விரைந்து வங்க வேண்டும், ஆறுகளில் மணல் கொள்ளையைத் தமிழக அரசு தடுக்க வேண்டும், அரசு கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x