

41 ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் 12-வது முறை பதக்கம் வென்றதற்காக இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் இன்று நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 4-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இதன் மூலம் ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பின் இந்திய ஆடவர் ஹாக்கி அணி முதல் முறையாகப் பதக்கம் வென்றுள்ளது. இந்திய அணி தரப்பில் சிம்ரன்ஜித்சிங் 2 கோல்கள் அடித்தார், ஹர்திக் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபேந்திர பால்சிங் தலா ஒரு கோல் அடித்தனர்.
முன்னதாக, ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி 8 தங்கம் உள்ளிட்ட 11 பதக்கங்களை வென்றுள்ளது. கடைசியாக 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றது. அதன்பின் தற்போது வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெண்கலப் பதக்கத்தை வென்ற சிறப்பான ஆட்டம். 41 ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் 12-வது முறை பதக்கம் வென்றதற்காக இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். டோக்கியோவில் கிடைத்த இவ்வெற்றி இந்திய ஹாக்கி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்துக்கான தொடக்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.