Published : 05 Aug 2021 11:43 AM
Last Updated : 05 Aug 2021 11:43 AM

'மக்களைத் தேடி மருத்துவம்'; இந்தியாவுக்கே முன்னோடி திட்டம்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

'மக்களைத் தேடி மருத்துவம்' இந்தியாவுக்கே முன்னோடி திட்டம் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதய நோய்கள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர் உள்ளிட்ட நோயாளிகளுக்கு, வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தேவையான மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் வழங்க, இந்தியாவிலேயே முதன்முறையாக, 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது.

இத்திட்டத்தை இன்று (ஆக. 05) கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சாமனப்பள்ளி கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது, சாமனப்பள்ளி கிராமத்தில் பயனாளியின் இல்லத்துக்கே நேரடியாகச் சென்று மருந்து, மாத்திரைகளை முதல்வர் வழங்கினார். 2-வது பயனாளியின் வீட்டுக்குச் சென்று பயனாளிக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையைப் பார்வையிட்டார்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக விளங்கக்கூடிய திட்டத்தை இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளோம். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாடுகள், மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்தது. கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்தத் துறை எப்படிச் செயல்பட்டது, குறிப்பாக, அதில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தன்னலமற்ற பணி முக்கியமான காரணமாக அமைந்தது என்பது நாட்டுக்கே தெரியும்.

அதன் தொடர்ச்சியாகத்தான் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். மருத்துவமனைகளை மக்கள் தேடி வரக்கூடிய சூழலை மாற்றும் வகையில், மக்களைத் தேடி மருத்துவம் செல்லும் காலத்தை உருவாக்கத் தொடங்கியிருக்கிறோம்.

நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சில அவசியமான சேவைகள் இத்திட்டம் மூலம் வழங்கப்படவுள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

குறிப்பாக, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரகப் பிரச்சினைகள், குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகள், ஆகியவற்றைக் கண்டறிந்து, சிகிச்சை அளிப்பது இத்திட்டத்தின் முக்கியப் பணி. இதில், பொது சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று, அவர்களின் சேவையை ஆற்ற இருக்கின்றனர்.

முதல் கட்டமாக, 1,264 பெண் சுகாதாரத் தன்னார்வலர்களும், 50 இயன்முறை மருத்துவர்களும் 50 செவிலியர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இத்திட்டம் படிப்படியாக, இந்த ஆண்டின் இறுதிக்குள் மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும். அவர்களுக்கான கூடுதல் சிகிச்சைகளை மருத்துவமனைகளில் வழங்குவோம்.

இதற்காக, முதல் கட்டமாக 242 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 30 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 1 கோடி மக்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

'ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்' என்று, பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தில் 'அனைவருக்கும் நல்வாழ்வு' என்பது ஒரு முக்கிய உறுதிமொழி. அதை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்த திட்டம். அமைச்சர்கள், அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி. இத்திட்டத்தின் நோக்கத்தை உணர்ந்து இச்சேவையை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x