

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் வருகிறது.
எனவே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை, வரும் 9-ம் தேதி வரை, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தடை விதித்து, ஆட்சியர் கார்மேகம் இன்று (ஆக. 05) அறிவித்துள்ளார்.
பிற நாட்களில் ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தியவர்கள் அல்லது ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கோவிட் நெகட்டிவ் என சான்று வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் வசிக்கும் உள்ளூர் மக்கள் போக்குவரத்தின்போது, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணத்தைக் காண்பித்துப் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மக்கள் அதிக அளவில் கூடும் கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கும் தடை விதித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.