Published : 05 Aug 2021 09:56 am

Updated : 05 Aug 2021 09:57 am

 

Published : 05 Aug 2021 09:56 AM
Last Updated : 05 Aug 2021 09:57 AM

கருணாநிதி நினைவு தினம்; பெரு விழாக்கள் வேண்டாம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

karunanidhi-death-anniversary-mk-stalin-writes-letter-to-dmk-cadres
கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின்: கோப்புப் படம்.

சென்னை

கரோனா கால நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 7 அன்று அவரவர் இல்லத்தின் வாசலில் கருணாநிதியின் படத்தினை வைத்து, மாலையிட்டு, மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்திட வேண்டும் என, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 05) எழுதிய கடிதம்:


"ஆகஸ்ட் 7.

ஒவ்வொரு உடன்பிறப்பின் இதயமும் தகர்ந்தது போன்ற உணர்வுடன் கண்ணீர் பெருக்கெடுத்த நாள். எதையும் தாங்கும் இதயம் கொண்ட அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற, வைர நெஞ்சம் கொண்ட தலைவர் கருணாநிதியை இயற்கை சதிசெய்து நம்மிடமிருந்து பிரித்த, பறித்த நாள். உடலால் அவர் பிரிந்தாலும் உடன்பிறப்புகள் மற்றும் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

இயற்கையின் கரங்கள் கொய்து சென்ற நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதிக்கு இது மூன்றாம் ஆண்டு நினைவேந்தல். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் எல்லா நாளிலும், அதன் ஒவ்வொரு நொடியிலும் அவர் நினைவின்றி நம் இயக்கமில்லை.

தமிழே மூச்சாக, தமிழர் நலமே வாழ்வாகக் கொண்டு, 80 ஆண்டுகளைக் கடந்த பொதுவாழ்வு கண்டு, 94 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்து, தமிழகத்தை வளம் பெறச் செய்து, இந்திய அரசியல் வானில் ஒளிவீசும் உதயசூரியனாகத் திகழ்ந்த மகத்தான தலைவர் கருணாநிதி.

நாம் மட்டும் அவரைப் போற்றவில்லை; நாடு போற்றுகிறது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று, தலைவர் கருணாநிதியின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்து, அவரது பெருமைகளை எடுத்துரைத்ததைக் கண்டோம்.

'இந்தப் புகழ்பெற்ற மண்டபத்தில், தம்முடைய வாழ்நாள் முழுவதையும் மாநிலத்தின் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்த கருணாநிதியின் உருவப் படமும் இனி இருக்கும். இந்தியா, விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, கருணாநிதி தனது இளமைப் பருவத்திலேயே தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

உயர்ந்த லட்சியங்களுடன் கூடிய சிறுவனாக இருந்தபோது, தாழ்த்தப்பட்டவர்களுக்காக, ஏழை, எளிய மக்களுக்காகப் பணியாற்றத் தொடங்கியபோது, நீண்ட காலமாக வெளிநாட்டு ஆதிக்கத்தின்கீழ் இருந்த இந்தியா, அந்நிய ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டு வறுமையிலும், கல்வியறிவின்மையாலும் சிக்கலில் இருந்தது.

அவர் தமது இறுதி மூச்சின்போது, இந்த மண்ணும், இதன் மக்களும் அனைத்துத் துறைகளிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அடைந்துள்ளதாகத் திருப்தி அடைந்திருக்க வேண்டும். தமது நீண்டகால, ஆக்கபூர்வமான வாழ்க்கையில் தாம் விழித்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் மாநில மக்களின் சேவைக்காகவும் தேசத்தின் சேவைக்காகவும் செலவிட்டோம் என்பதும் அவருக்குத் திருப்தியளித்திருக்கும்.

தமிழ் செம்மொழியாக அதிகாரபூர்வ அங்கீகாரம் பெறுவதை உறுதி செய்தவர் கருணாநிதி. கருணாநிதி தனிச்சிறப்பு வாய்ந்த தலைவராகத் திகழ்ந்தார். நமது தேசிய இயக்கத்தின் தலைவர்களுடன் நமக்கு இருந்த கடைசி இணைப்புகளில் அவரும் ஒருவர்' எனப் புகழாரம் சூட்டினார் குடியரசுத் தலைவர்.

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவுக்கும் கருணாநிதியின் திருவுருவப் படத்திறப்பு விழாவுக்கும் தலைமை வகித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதியின் பன்முகத்தன்மையையும் அவற்றின் சிறப்பியல்புகளையும் எடுத்துக் காட்டி உரையாற்றினார்.

'பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு முறையாகத் தீர்வு காணக்கூடியவராக, எத்தகைய கடினமான சிக்கல் வாய்ந்த பிரச்சினைகளாக இருந்தபோதும் அதைத் தீர்த்து வைக்கக் கூடியவராக கருணாநிதி விளங்கினார். நிர்வாகத் திறமை மிக்கவராகவும் இந்த பெரும் அவையில் விவாதங்களில் திறன்பட பங்காற்றியவராகவும் அவர் விளங்கினார்.

தமிழ் மொழியில் மிகச் சிறந்தவராக விளங்கிய அவர், தனது அரசியல் எதிரிகளையும் அதன் மூலம் கவர்ந்தார். மக்களுக்கான முதல்வர் என்று சொல்லக்கூடிய வகையில், பல்வேறு மறுவாழ்வுத் திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள், குடிசை மாற்றுத் திட்டங்கள், நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குதல், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியது, சாதி ஒழிப்புக்காக சமத்துவபுரங்கள் உருவாக்கியது என, ஏழ்மையில் உள்ளவர்களுக்கான பலவற்றை நிறைவேற்றியவர் கருணாநிதி.

கருணாநிதி அனைத்து குடியரசுத் தலைவர்களுடனும் பழகியுள்ளார். அனைத்து பிரதமர்களுடனும் உரையாடியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து முதல்வர்களுக்கும், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் முன்மாதிரியாக, ரோல் மாடலாக கருணாநிதி இருந்துள்ளார்' என எடுத்துரைத்தார்.

கருணாநிதியின் பொதுவாழ்வும் அவரது சாதனைகளும் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாதவை. அதைத்தான் குடியரசுத் தலைவரும் ஆளுநரும் எடுத்துரைத்தனர். அத்தகைய மகத்தான சிறப்புமிக்க நம் தலைவரின் திருவுருவப் படத்தைச் சட்டப்பேரவையில் திறந்து வைப்பதற்கு, அவர் மறைந்து மூன்றாண்டு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்திய அரசியல் தலைவர்களின் முன்மாதிரியான 'ரோல் மாடல்' தலைவருக்கு, திமுக அரசு அமைந்த பிறகுதான் சட்டப்பேரவை மண்டபத்தில் திருவுருவப் படம் திறப்பு விழா நடைபெற்றுள்ளது.

அதனால்தான் அந்த விழாவில், உங்களில் ஒருவனான நான் உரையாற்றும்போது, 'இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர், தமிழன்னையின் தலைமகனான கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்ததை எண்ணி, தமிழகத்தின் முதல்வராக மகிழ்கிறேன், கருணாநிதியின் மகனாக நெகிழ்கிறேன்!' எனக் குறிப்பிட்டேன்.

அந்த விழாவின் சிறப்பினை நினைக்கையில், உங்களில் ஒருவனாக, கருணாநிதியின் உடன்பிறப்பாக ஆனந்தக் கண்ணீரில் நனைகிறேன். கருணாநிதியின் வழியில் ஆட்சி நிர்வாகத்தினைப் பயில்கிறேன்.

'தென்றலைத் தீண்டியதில்லை. தீயைத் தாண்டியிருக்கிறேன்' என்று 'பராசக்தி' திரைப்படத்தில் தலைவர் கருணாநிதி எழுதியிருப்பார். அவரது ஓய்விடத்தில் சூளுரைத்தபடி, ஆறாவது முறையாக ஆட்சியமைத்திருக்கும் திமுக இந்தத் தேர்தல் களத்தில் தென்றலைத் தீண்டவில்லை. தீயைத் தாண்டி வந்திருக்கிறது. இன்னும் கடக்க வேண்டிய நெருப்பாறுகள் உண்டு. அதனைக் கடந்து நிற்கும் வலிமையும் இந்த இயக்கத்துக்கு உண்டு. அதன் தலைமைப் பொறுப்பைச் சுமந்திருக்கும் என்னை வழிநடத்தும் பேராற்றல் கருணாநிதி எனும் வரலாற்று நாயகருக்குரியது. அதனால்தான், மக்களின் பேராதரவுடன் தனிப்பெரும்பான்மைமிக்க ஆட்சியினை அமைத்திருக்கிறோம்.

உயிர்நிகர் தலைவர் கருணாநிதி நம்மிடையே உலவவில்லை என்றாலும், உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் அவர் நமக்கு ஊட்டிய உணர்வு நம் குருதியோட்டத்தில் கொள்கையோட்டமாக இருக்கிறது. அவர் காட்டிய பாதை, அவர் அளித்த பயிற்சி, அதனால் அமைந்திருப்பதும் அவரது ஆட்சி என்பதை நெஞ்சத்தில் நிலைநிறுத்திக் கொண்டுதான் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' ஆகிய நான் முதல்வர் பொறுப்பினை ஏற்றேன்.

'சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்' எனத் தலைவர் கருணாநிதி வகுத்தளித்த நெறியின்படி, மாநிலத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும், பேரிடர் சூழலிலும் தமிழக மக்களுக்கு அரணாக இருந்து, திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தலையாய கடமையாகக் கொண்டு செயலாற்றுகிறேன்.

நெஞ்சில் நிறைந்துள்ள தலைவர் கருணாநிதியிடம் அதற்கான வழியினைக் கற்றிருக்கிறேன். அவரிடமிருந்து அதற்கான வலிமையையும் பெற்றிருக்கிறேன். உடன்பிறப்புகளாம் உங்களின் துணையுடனும், தமிழக மக்களின் பேராதரவுடனும் தலைவர் கருணாநிதி வழியில் திமுக அரசின் பயணம் தொடரும் என்பதை அவரது மூன்றாம் ஆண்டு புகழ்வணக்க நேரத்தில் உறுதிமொழிகிறேன்.

உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒத்துழைப்பே இந்தப் பயணத்திற்கு வலு சேர்க்கும். கருணாநிதிக்குப் புகழ் சேர்க்கும்.

கரோனா கால நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றை முறையாகக் கடைப்பிடித்து, ஆகஸ்ட் 7 அன்று அவரவர் இல்லத்தின் வாசலில் தலைவர் கருணாநிதியின் படத்தினை வைத்து, மாலையிட்டு, மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்திட வேண்டுகிறேன். பெரு விழாக்கள் வேண்டாம். அலங்காரங்கள், ஒலிபெருக்கிகளைத் தவிர்த்திடுவீர். நம் நெஞ்சங்களிலும் நினைவுகளிலும் நிரந்தரமாக இருந்து, நாட்டை வழிநடத்தும் கருணாநிதிக்கு வீடுகள்தோறும் மரியாதை செலுத்திடுவோம். அவர் வகுத்த பாதையில் பயணித்து தமிழகத்தை மாண்புறச் செய்திடுவோம்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!

கருணாநிதிகருணாநிதி நினைவு தினம்மு.க.ஸ்டாலின்திமுகராம்நாத் கோவிந்த்KarunanidhiKarunanidhi death anniversaryMk stalinDMKRamnath govind

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x