Published : 05 Aug 2021 03:15 AM
Last Updated : 05 Aug 2021 03:15 AM

செவ்வாய் கிரகத்திலிருந்து புகைப்படங்களை அனுப்பியது மார்ஸ் ரோவர்

செவ்வாய் கிரகத்திலிருந்து மார்ஸ் ரோவர் கருவி, பூமிக்கு அழகிய புகைப்படங்களை எடுத்து அனுப்பி யுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமானநாசா, செவ்வாய் கிரகத்துக்கு கடந்த ஆண்டு விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலமானது கடந்த பிப்ரவரியில் செவ்வாய் கிரகத்துக்கு சென்றடைந்தது. அந்த விண்கலத்திலிருந்து பிரிந்த பெர்சவரன்ஸ் ரோவர் கருவி செவ்வாயில் பத்திரமாக தரையிறங்கியது. சக்கரங்களைக் கொண்ட அந்தக் கருவி, செவ்வாய் கிரகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகிறது.

தற்போது நாசா விண்வெளி அமைப்பானது, தனது பெர்சவரன்ஸ் ரோவரை, ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகைப் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு ஆழமான பள்ளத்தில்தரையிறக்கியுள்ளது. பெர்சவரன்ஸ் ரோவர், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகத்தின் பாறைகளைத் துளையிடுவது மற்றும்அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடும் பணியில் ஈடுபடும் என அப்போது அறிவிக்கப்பட்டது. அதன்படி தொடர்ந்து ஆய்வுகளை ரோவர் நடத்தி வருகிறது.

இந்நிலையில் பெர்சவரன்ஸ் ரோவர் கருவியானது செவ்வாயின் அழகிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த புகைப்படங்கள் நாசாவுக்கு அண்மையில் கிடைத்துள்ளன. இதை `மெயில் ஃப்ரம் மார்ஸ்’ என்று நாசா விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நாசா அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.

அதுவும், ‘செவ்வாய் கிரகத்தில் இருந்து உங்களுக்கு மெயில் வந்துள்ளது' என்ற வாக்கியத்துடன் இது பதிவிடப்பட்டுள்ளது.

பெர்சவரன்ஸ் ரோவர் எடுத்த 3 புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றில், செவ்வாய் கிரகத் தரைப்பரப்பில் சிவப்பு-பழுப்பு நிற அலை அலையான கோடுகள் தென்படுகின்றன. இவை அந்த கிரகத்தில் உண்டான அடுக்குப் பாறைகளாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர். இந்தப் படத்தில் செவ்வாய் கிரகத்தின் ஜீஜி பள்ளத்துக்குள் அடுக்கு பாறை உருவாக்கத்தை அதன் பட்டைகள் மற்றும் படிக்கட்டுகள் போன்ற அடுக்குகளாக அரித்துச் சென்றிருப்பதைக் காட்டுகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..

மற்றொரு புகைப்படத்தில் வடக்கு வசந்த காலத்தில் ஒரு தனித்துவமான துருவ குன்று பகுதியில் எடுக்கப்பட்ட பரப்பு தெரிகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புகைப்படமானது சில சுவாரஸ்யமான வடிவங்களை வெளிப்படுத்துகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

3-வதாக ஒரு புகைப்படத்தில் செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் பனிக்கட்டிகள் பரவுகின்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x