Published : 02 Feb 2016 01:22 PM
Last Updated : 02 Feb 2016 01:22 PM

கடவுளாக வேண்டாம், சக மனிதராக பாருங்கள்: திருநங்கை எஸ்.ஐ. உருக்கம்

‘எங்களை கடவுளாக வணங்கவும் வேண்டாம். இழிவாக பார்க்கவும் வேண்டாம். சக மனிதராக நினைத்தாலே போதும்’ என இந்தியாவில் முதல் முறையாக காவல் உதவி ஆய்வாளராகியுள்ள திருநங்கை க.பிரித்திகா யாசினி வேண்டுகோள் விடுத்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் திருநங்கையருக்கு பாராட்டு மற்றும் பாலின சமத்துவம் ஏன்? எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

அதில், உதவி ஆய்வாளராகியுள்ள திருநங்கை க.பிரித்திகா யாசினி பேசியதாவது: ஆணுக்கு பெண் சமம் என்ற போதும், பெண்களுக்கு இன்னும் 33 சதவீதம் தான் ஒதுக்கப்படுகிறது.

3-ம் பாலினமான திருநங்கைகள் குறித்த புரிதலும், அவர்கள் மீதான பெரும்பான்மை மக்களின் மதிப்பீடும் மெச்சும்படியாக இல்லை என்பதே உண்மை. திருநங்கைகளை ‘திருநர்’ என்றழைக்க இன்றைய சமூகம் மறுக்கிறது. திருநங்கைகள் தன்னை ஒரு பெண்ணாகவே உணர்கின்றனர்.

அவ்வாறே இச்சமூகமும் அவர்களை அங்கீகரிக்க வேண்டும்.

ஆனால், இறந்த பின் புதைப்பதில் கூட எந்த சுடுகாட்டில் புதைப்பது என சிக்கல் எழுகிறது. எங்களை கடவுளாக வணங்க வேண்டாம். இழிவாக பார்க்கவும் வேண்டாம். சக மனிதராக நினைத்து பாருங்கள் அதுவே எங்களுக்கு மன நிறைவைத் தரும் என்றார்.

பொறியியல் கல்லூரியின் முதல் திருநங்கை மாணவி கிரேசி பானுவும் பேசினார்.

வாசகர் வட்டத் தலைவர் பேராசிரியர் க.லெனின்பாரதி, நூலகர் அ.பீர்பாட்ஷா, அரசு கல்லூரி பேராசிரியர் வ.கிருட்டிணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x