Published : 05 Aug 2021 03:16 AM
Last Updated : 05 Aug 2021 03:16 AM

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு கடந்து வந்த பாதை

சொத்துக்காக நடந்த பிரச்னையில் டாக்டர் சுப்பையா கடந்த 2012-ம்ஆண்டு எதிர்தரப்பினர் மீது நில அபகரிப்பு புகார் கொடுக்க ஆத்திரமடைந்த பொன்னுசாமி தரப்பு கூலிப்படையை வைத்துகச்சிதமாக கொலையும் செய்துள்ளது. சம்பவ இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிப்பதிவுகள், கொலையில் ஈடுபட்ட ஐயப்பன் அரசு தரப்பு சாட்சியாக மாறியது இந்த வழக்கின் முக்கிய திருப்பங்கள்.

இந்த வழக்கில் அபிராமபுரம் போலீஸார் கடந்த 2015-ம் ஆண்டு சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் இறுதிஅறிக்கையை தாக்கல் செய்தனர். அதன்பிறகு இந்த வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. டாக்டர் சுப்பையாவின் உறவினர்கள் தமிழக அரசின் உயர் பதவிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் என பல்வேறு பதவிகளை வகித்து வருகின்றனர் என்றாலும் வழக்கு விசாரணை கடை 6 ஆண்டுகளாக நீடித்து வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த இந்த கொலை வழக்கில் கடந்தாண்டு உயர் நீதிமன்றம் தலையிட்டு தினந்தோறும் என்ற அடிப்படையில் வழக்கை நடத்தி முடிக்கவேண்டும் என உத்தரவிட்டபிறகே விசாரணைசூடுபிடித்தது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி நேற்று குறிப்பிடத்தக்க தீர்ப்பை பிறப்பித்துள்ளார்.

கொலைக்கான காரணம்

டாக்டர் சுப்பையாவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு. கன்னியாகுமரி அருகே அஞ்சுகிராமம் என்ற ஊரில் ரூ.பல கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் நிலம் டாக்டர் சுப்பையாவுக்கு இருந்துள்ளது. இந்த நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த ஆசிரியரான பொன்னுசாமியும், அவரது குடும்பத்தினரும் அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். இதுதொடர்பாக பொன்னுசாமி குடும்பத்துக்கும், டாக்டர் சுப்பையாவுக்கும் இடையே கடந்த 1958–ம் ஆண்டு முதல் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலம் இறுதியில் டாக்டர் சுப்பையா குடும்பத்துக்கு சொந்தமானது என நீதிமன்றம் இடைக்காலமாக தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து பொன்னுசாமி தரப்பினர் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியுள்ளனர். இறுதியில் டாக்டர் சுப்பையா தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருவதாலும், ஆண் வாரிசு யாரும் இல்லை என்பதாலும் சுப்பையாவை தீர்த்துக்கட்டிவிட்டால் சொத்துசுலபமாக தங்களது வசமாகி விடும் என நினைத்து சுப்பையாவை கொலை செய்ய கூலிப்படையை வைத்து பொன்னுசாமி குடும்பத்தினர் சதி திட்டம் தீட்டியுள்ளனர்

சதித்திட்டம் உருவானது எப்படி?

திருநெல்வேலி இஎஸ்ஐ மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் ஜேம்ஸ் சதீஷ்குமார் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு கீழ் முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். பைனான்ஸ் தொழிலில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க வழக்கறிஞர் வில்லியம் உறுதுணையாக இருந்துள்ளார். தனது நண்பரான வழக்கறிஞர் பாசிலின் சொத்து பிரச்னையை தீர்க்க வில்லியம்ஸ் ஏற்பாட்டின் பேரில் டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் தனது கூலிப்படையினர் மூலமாக சுப்பையாவை கொலை செய்துள்ளார். இதன்மூலம் சுப்பையாவின் சொத்தை ரூ.12 கோடிக்கு விற்றால் அதில் ரூ.6 கோடியை டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமாருக்கு தருவதாக பொன்னுசாமி தரப்பினர் தெரிவித்துள்ளனர். அதன்பிறகே கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டு, கொலையும் நடந்துள்ளது.

'மிரட்டல்களை சந்தித்தேன்'

இந்த வழக்கில் திறம்பட வாதாடி இந்தியாவிலேயே முதன்முறையாக 2 வழக்கறிஞர்கள், ஒரு அரசு மருத்துவருக்கு தூக்கு தண்டனை பெற்று கொடுத்துள்ளனர். அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.விஜயராஜ் கூறும்போது, ‘‘ இந்த வழக்கை கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் என் மீது நம்பிக்கை வைத்து என்னிடம் ஒப்படைத்தனர். அந்த நம்பிக்கை வீண்போகாத வகையில் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்று கொடுத்து இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான விசயம். இந்த வழக்கில் எனக்கு உறுதுணையாக செயல்பட்ட அபிராமபுரம் காவல் ஆய்வாளர்கள் சீனிவாசன், இளங்கோவன், ராஜேஷ்கண்ணா ஆகியோரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமான இந்த வழக்கில் எனக்கும் பல்வேறு மிரட்டல்கள் வந்தன. எதைப்பற்றியும் கவலைப்படாமல் துணிந்து நடத்தினேன். இந்த வழக்கில் 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்" என்றார்.

எனது நம்பிக்கை வீண்போகவில்லை!

இந்த தீர்ப்பு குறித்து கொலையான டாக்டர் சுப்பையாவின் மனைவி சாந்தி கண்ணீர் மல்க கூறும்போது, ‘எனது கணவர் யாருக்கும் தீங்கு இழைக்காதவர். அவரை கொலை செய்தவர்களுக்கு சரியான தீர்ப்பை இறைவன் கொடுத்துள்ளான். இந்த வழக்கை திறமையாக கையாண்ட அரசு வழக்கறிஞருக்கும், புலன் விசாரணை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது இரு மகள்களும் வழக்கறிஞர்கள்தான். நானும், எனது கணவரும் எப்போதுமே நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். அது வீண்போகவில்லை. தாமதமானாலும் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பினால் எனது கணவர் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க இந்த தீர்ப்பு நிச்சயமாக முன்னுதாரணமாக இருக்கும். எனது கணவர் மரண வேதனை அனுபவித்த அந்த 9 நாட்களிலும் மணமாகாத எங்களது மகள்களை நினைத்து கலங்கினார். அன்று அவர் கலங்கியதற்கு தற்போது இறைவன் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளான்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x