தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 1,354 பேரிடம் கூடுதல் வட்டி தருவதாக ரூ.3.5 கோடி மோசடி: தனியார் நிறுவனத்தினர் மீது வழக்குப்பதிவு

தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 1,354 பேரிடம் கூடுதல் வட்டி தருவதாக ரூ.3.5 கோடி மோசடி: தனியார் நிறுவனத்தினர் மீது வழக்குப்பதிவு
Updated on
1 min read

கூடுதல் வட்டி தருவதாக ஆயிரக்கணக்கானோரிடம் தனியார் நிதி நிறுவனம் ஒன்று ரூ.3.5 கோடி மோசடி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த தனியார் நிறுவனத் தலைவர், இயக்குநர்கள் மீது புதுச்சேரி சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது.

புதுச்சேரி, முதலியார்பேட்டை ஜான்சி நகர் 2-வது குறுக்குத் தெருவில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட இந்நிறுவனத்தின் கிளையானது டெபாசிட் பணத்துக்கு கூடுதல் வட்டி, குறுகிய கால தவணை உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்தது. இதை நம்பி தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த பலர் மாதந்தோறும் ஆயிரம் முதல் லட்சம் வரை பணத்தை செலுத்தியுள்ளனர்.

இந்நிறுவனத்தில் புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரில் வசிக்கும் பழனி(50) என்பவர் நான்கைந்து திட்டங்களில் சேர்ந்து, பணம் செலுத்தியுள்ளார். இவ்வாறாக பழனியிடம் இருந்து ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 200-ஐ பெற்றுக் கொண்ட இந்நிறுவனம், மேலும் சில திட்டங்களையும் சேர்த்து மொத்தம் ரூ.12 லட்சத்து 71 ஆயிரத்து 200-ஐத் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலையில், திடீரென இந்நிறுவனத்தை நடத்திய நிர்வாகிகள் அதை மூடிவிட்டு சென்றுவிட்டனர்.

டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தை பழனி பலமுறை தொடர்பு கொண்டும் பணத்தை பெற முடியவில்லை. இதுதொடர்பாக புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் அவர் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

கைது செய்யும் நடவடிக்கை

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பழனியிடம் மட்டுமின்றி தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 1,354 பேரிடம் ரூ.3.5 கோடி வரை இந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் நிறுவனரான டெல்லியைச் சேர்ந்த சந்தோஷி லால் ரத்தோர், இயக்குநர்கள் கஞ்சன் ராஜ்வாத் குஷ்வா, நிர்மலா ரத்தோர், தலைவர் செய்யது ரஷித் ஹஸ்மி உள்ளிட்டோர் மீது மோசடி பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்த புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட அலுவலகத்தை சோதனையிட்டு ஆவணங்களை கைப்பற்றி சொத்துகளை முடக்கவும் திட்டமிட்டுஉள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in