

ராஜீவ்காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் டைடல் பார்க் அருகே ரூ.108 கோடியில் ‘U’ வடிவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடியும்போது, அங்குள்ள 2 சிக்னல்களை அகற்றி விட்டு, வாகனங்கள் சீராக செல்ல ஏற்பாடு செய்யப்படும் என தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பிரதான சாலையாக இருக்கும் ராஜீவ்காந்தி சாலையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஐடி நிறுவனங்கள் உட்பட பல்வேறு வகையான அலுவலகங்கள் இருப்பதால், பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சாலையில் வந்து செல்கின்றன. இதனால், இந்தச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டாலும், வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கிடையே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தி, டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்ட பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி, ராஜீவ்காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ‘U’ வடிவில் ரூ.108 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இருப்பினும், கரோனா தாக்கம் காரணமாகஇந்த மேம்பாலப் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது, ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், இந்த மேம்பாலப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக தமிழக சாலைமேம்பாட்டு நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ராஜீவ்காந்தி சாலையில் அலுவலக நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்குள்ள டைடல் பார்க் மற்றும் இந்திராநகர் சிக்னல் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு 13 ஆயிரம் வாகனங்கள் கடந்துசெல்கின்றன. எனவே, இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ‘U’ வடிவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பாலப் பணிகளை 2022-ல் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்தப் பணிகள் நிறைவடையும்போது டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் சிக்னல்கள் அகற்றப்பட்டு, வாகனங்கள் சீராக தடையின்றி செல்ல ஏற்பாடு செய்யப்படும்” என்றனர்.