

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ.1,86,30,127 நிதி திரட்டி 3 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
முதல் திட்டமாக கரோனா பேரிடர் காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரூ.10,05,000 செலவில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 2-வது திட்டமாக பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்ட மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.25,95,000 செலவில் குளிர்பதனப் பெட்டிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட கருவிகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் அண்ணா பிறந்த நாளான செப். 15, கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 03, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 01, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி பிறந்தநாளான நவ. 27 ஆகியவற்றை குறிக்கும் வகையில் ரூ.1,50,30,127-ஐ கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.
நிதி வழங்கும் நிகழ்வில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன், மாநில தலைமை நிலைய செயலாளர் தி.அருள்குமார், மாநில பொருளாளர் உதயகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கி.கண்ணதாசன், ஆ.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.