Published : 05 Aug 2021 03:19 AM
Last Updated : 05 Aug 2021 03:19 AM

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் உள்ளூரில் விலைபோகாத உடன்குடி முருங்கை: சரிவை சந்தித்த சாத்தான்குளம் விவசாயிகள்

சாத்தான்குளம் அருகே போலையர்புரத்தில் உள்ள கொள்முதல் மண்டிக்கு விற்பனைக்காக வந்துள்ள முருங்கைக்காய்கள்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், உடன்குடி, சாயர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை சாகுபடி அதிகரித்து வருகிறது. நல்ல வருமானம் கிடைப்பதாலும், பராமரிப்பு செலவு குறைவு என்பதாலும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் முருங்கை பயிரிட்டுள்ளனர்.

முருங்கை கொள்முதல் செய்வதற்காக சாத்தான்குளம், தட்டார்மடம், போலையர்புரம், இடைச்சிவிளை உள்ளிட்ட இடங்களில் தனியார் முருங்கை மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மண்டிகள் முருங்கைக் காய்களை கொள்முதல் செய்து, அவற்றை பேக்கிங் செய்து லாரிகள் மூலம் மதுரை, சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், டெல்லிக்கு அனுப்புகின்றனர். இங்கிலாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

இந்த பகுதியில் கடந்த வாரம் வரை முருங்கை ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை என்ற விலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த வாரம்விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.5-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் விவசாயிகள்வேதனை அடைந்துள்ளனர். செலவுக்கு கூட விலை கிடைக்காததால் முருங்கைக்காய்களை பறித்து ஆடு, மாடுகளுக்கு தீவனமாக போடும் நிலை ஏற்பட்டுள்ளது. முருங்கை சீஸன் தொடங்கி, வரத்துஅதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சாத்தான்குளம் அருகேயுள்ள கடாட்சபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஞானமுத்து என்பவர் கூறும்போது, “கடந்த ஆண்டு முருங்கை விவசாயம் நல்ல முறையில் கைகொடுத்தது. ஆனால், இந்த ஆண்டு நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. முருங்கைக்காய்களை ஆடு, மாடுகளுக்கு தீவனமாக போடுகின்றோம்” என்றார்.

முருங்கை மண்டி வியாபாரியும், விவசாயியுமான பாலமுருகன் கூறும்போது, “முருங்கைக்காய் விளைச்சல் தற்போது சாத்தான்குளம், ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிகரித்துள்ளது.

கேரளாவில் கரோனோ பரவல் இருப்பதால் அங்கு கொண்டு செல்வது குறைந்துள்ளது. இதனால் முருங்கை கொள்முதல் விலை குறைந்துள்ளது” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x