

முதல்வர் ஜெயலலிதா நாளை ஆர்.கே.நகர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் பற்றிய அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான முதல்வர் ஜெயலலிதா நாளை (28-ம் தேதி) அப்பகுதிக்கு செல்கிறார்.
வழக்கமாக தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் திட்டங் களை தொடங்கி வைக்கும் முதல்வர், நாளை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட வ.உ.சி.நகர் விளையாட்டு மைதானத்தில் இருந்தபடி கொருக்குப்பேட்டை மேம்பாலம், பல்வேறு அலுவலக கட்டிடங்கள், பூங்காக்களை திறந்து வைக்கிறார். அத்தொகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பாலிடெக்னிக், ஐடிஐ போன்றவற் றுக்கான புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், தொகுதி மக்களிடையே உரையாற்றுகிறார்.
ஏற்பாடுகள் மும்முரம்
தற்போது திமுக வெளியிடும் விளம்பரங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல்வரது பேச்சு இருக்கும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். தொகுதிக்கு வரும் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக போயஸ்கார்டன் முதல், நிகழ்ச்சி நடக்கும் இடம் வரை வரவேற்பு பேனர்களை வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ஆர்.கே.நகரில் போட்டியா?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டபோது, பதிவான ஒரு லட்சத்து 81 ஆயிரம் வாக்குகளில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளரான மகேந்திரன் உள்ளிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
எனவே, மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியிலேயே போட்டியிட முதல்வர் ஜெயலலிதா ஆலோசித்து வருவதாகவும், அதற்கான முன்னோட்டம்தான் இந்த மக்கள் சந்திப்பு என்றும் அதிமுகவினர் கூறுகின்றனர்.