

நடமாடும் தாய்ப்பால் வங்கியைத் தெலங்கானாவில் வரும் 6-ம் தேதி திறக்கவுள்ளனர். அதேபோன்று புதுச்சேரியிலும் திறக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தினார்.
புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கடந்த 1-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா இன்று நடந்தது.
விழாவில் ஆளுநர் தமிழிசை பங்கேற்றுப் பேசியதாவது:
"தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து அளித்து வந்தாலும் மக்களிடம் சென்றடைந்துள்ளதா என்றால் கேள்விக்குறிதான். 6 மாதம் வரை தாய்ப்பால் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினாலும் தாய்மார்கள் பவுடர் பாலுக்குப் பிறகு தாய்ப்பால் கொடுப்பதா அல்லது தாய்ப்பால் கொடுத்தபின் பவுடர் பால் கொடுப்பதா? எனக் கேட்கின்றனர். நான் மகப்பேறு மருத்துவர். பிறந்த குழந்தைகள் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால்தான் அருமருந்து.
தெலங்கானாவில் தாய்ப்பால் வங்கியை சமீபத்தில் திறந்து வைத்தேன். ஹைதராபாத்தில் தாய்ப்பால் வங்கி செயல்படுகிறது. இதனால் நகரப் பகுதியில் உள்ள குழந்தைகள் பயனடைகின்றனர். அதே நேரத்தில் கிராமங்களில் சில குழந்தைகளுக்காக நடமாடும் தாய்ப்பால் வங்கி திறக்க வேண்டும் எனத் தெலங்கானா அரசிடம் கேட்டுக்கொண்டேன். வரும் 6-ம் தேதி நடமாடும் தாய்ப்பால் வங்கியைத் திறக்க உள்ளனர். புதுவையில் ஏற்கெனவே தாய்ப்பால் வங்கி உள்ளது.
புதுவை நகர் மட்டுமல்ல, சுற்றுவட்டார கிராமக் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் நடமாடும் தாய்ப்பால் வங்கி தேவை. ஆண், பெண் இரு குழந்தைகயையும் சரிசமமாகப் பார்க்க வேண்டும். தற்போது கரோனா எனும் இக்கட்டான காலத்தில் உள்ளோம். தாய்மார்கள் தடுப்பூசி போட வேண்டும். 3-வது அலை பரவக் கூடாது என்பதுதான் எனது பிரார்த்தனை. தாய்மார்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் உள்ளது. தடுப்பூசி குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்".
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.