

நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் மனைவி லோகா என்ற வையம்மாள் (32) கார் விபத்தில் பலியானார்.
மதுரை முத்து தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்து வருகிறார். இவர் மனைவி லோகா மதுரையில் இருந்து இன்று காலை பிள்ளையார்பட்டி செல்வதற்காக காரில் புறப்பட்டார். டிரைவர் கண்ணன் காரை ஓட்டினார். திருப்பத்தூர் கோட்டையிருப்பு பகுதி அருகே கார் சென்றபோது காரின் இடது புற டயர் வெடித்ததால், கார் கட்டுப்பாட்டிலிருந்து விலகி புளிய மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே லோகா இறந்தார். டிரைவர் கண்ணன் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை முத்து ஒரு நிகழ்சிக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். மனைவி விபத்தில் பலியான செய்தியறிந்து அவர் அங்கிருந்து புறப்பட்டார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை அவர் மதுரை வருகிறார்.
மதுரை முத்து - லோகாவுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.