Published : 04 Aug 2021 04:28 PM
Last Updated : 04 Aug 2021 04:28 PM

எல்லைப் பாதுகாப்பு, கோவிட் 19-ஐக் கையாள்வதில் முப்படைகள் சிறந்த சேவை: குடியரசுத் தலைவர் பெருமிதம்

குன்னூர்

எல்லைப் பாதுகாப்பு மற்றும் கோவிட் -19 ஆகியவற்றைக் கையாள்வதில் முப்படைகளின் சேவை பாராட்டுக்குரியது எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில், 77-வது பயிற்சி வகுப்பு அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆக.4) கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:

''வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி நாட்டின் முதன்மைப் பயிற்சி நிறுவனங்களில் ஒன்று. இந்தக் கல்லூரியில் முப்படைகள் மற்றும் நட்பு நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது வரவேற்கத்தக்கது.

நீலகிரி மலை இயற்கை எழில் மற்றும் காலநிலை கற்றலுக்கு உகந்தது. இதை விவரிக்க ‘சல்யூரியஸ்’ என்ற வார்த்தை அடிக்கடி சொல்லப்படுகிறது. அதன் அர்த்தம் ஆரோக்கியம் தருவதாகக் குறிக்கிறது. இந்த இடம் பூமத்திய ரேகைக்கு வடக்கே 11 டிகிரி மட்டுமே உள்ளது. ஆனால், இங்கு ஆண்டு முழுவதும் மிகவும் இனிமையான வானிலை உள்ளது.

19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் சானடோரியம் இந்தப் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டது. இங்குள்ள மாணவர் அதிகாரிகள் திறமை மதிப்பீடு, கடுமையான செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

நாட்டின் உயர் பாதுகாப்பு அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உள்நாட்டுமயமாக்கல் மற்றும் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைய உத்வேகம் வழங்கப்படுகிறது. முப்படைகளை எதிர்காலத்தில் தயார்படுத்தும் நோக்கில் இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

முப்படைகள் அதிக ஒருங்கிணைப்பை நோக்கிச் செயல்படுவதால், கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு வலுவடையும். இதனால், ஒருசில சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகள் இந்தப் பயிற்சியின் மூலம் பயன்பெறுகின்றனர்.

நமது நாட்டின் முப்படைகளின் அயராத முயற்சி மற்றும் தியாகங்கள் குடிமக்களின் மரியாதையைப் பெற்றுள்ளன. போர் மற்றும் சமாதானக் காலங்களில் அவர்கள் தேசத்துக்கு விலைமதிப்பற்ற சேவையை வழங்கி வருகின்றனர். உள் மற்றும் வெளிநாட்டுப் பாதுகாப்பு மற்றும் இயற்கைப் பேரிடர்க் காலங்களில் பல சவால்களைச் சந்தித்து அர்ப்பணிப்பு மற்றும் கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

கோவிட் -19 தொற்று அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. இந்தக் கல்லூரி ஆன்லைன் கற்றலைத் திறம்படப் பின்பற்றி, பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதேபோல், பாடத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

எல்லைப் பாதுகாப்பு மற்றும் கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில் முப்படைகளின் சேவை பாராட்டுக்குரியது. சமீபத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் உரையாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் மன உறுதி, கடமைக்கான அர்ப்பணிப்பைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.

உங்களில் பெரும்பாலோர் இந்த சவால்களைக் கையாளும் முன்னணி வீரர்களாக இருந்திருக்கிறீர்கள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை நாடு பாராட்டுகிறது. மாற்றங்கள் நிறைந்த சவாலான காலங்களை நாம் கடந்து செல்கிறோம். தேசம் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் போர் அல்லாத மோதல்கள் பல்வேறு சவால்களை ஏற்படுத்துகின்றன. அனைத்து அம்சங்களையும் பற்றிய முழுமையான புரிதல் தேவை.

மாறிவரும் இந்தக் காலங்களில், நமது தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் புதிய வழிகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இதற்கு ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படும்’’.

இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x