

அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட ரிவால்டோ யானை, ஒரே இரவில் 40 கிலோ மீட்டர் நடந்து அது சுற்றித்திரிந்த கிராமம் அருகே வந்ததால், வனத்துறையின் முயற்சி தோல்வியடைந்துவிட்டதாக, கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம், மாவனல்லா, சொக்நள்ளி கிராமப் பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றித் திரிந்து வந்தது.
தும்பிக்கையில் காயம் காரணமாகவும், வலது கண் பார்வைக் குறைபாடு காரணமாகவும் வனப் பகுதிக்குள் செல்லாமல், 12 ஆண்டு காலமாகத் தொடர்ந்து குடியிருப்புப் பகுதியிலேயே இந்த யானை சுற்றித் திரிந்தது.
அந்த யானை கடந்த மே மாதம் வாழைத்தோட்டம் கிராமத்தின் அருகே, கரால் எனப்படும் மரக்கூண்டில் அடைத்து, வனத்துறையில் கால்நடை மருத்துவக் குழு சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை முடிந்த நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வனப்பகுதியில் விடக் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, யானையை வனத்தில் விடுவது குறித்து முடிவு செய்யக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு ரிவால்டோ யானையை அடர்ந்த வனப் பகுதியில் விட முடிவு செய்தது. அதன் பேரில், யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது.
நேற்று முன்தினம் ரிவால்டோ யானை லாரியில் ஏற்றி முதுமலைப் புலிகள் காப்பகத்தில் உள்ள சிக்கல்லா வனப்பகுதியில் விடப்பட்டது. 3 மாத காலம் மரக்கூண்டில் அடைக்கப்பட்டிருந்த யானை மீண்டும் வனத்தில் விடப்பட்டது.
இந்நிலையில், அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்ட ரிவால்டோ 24 மணி நேரத்தில் 12 ஆண்டு காலமாகத் தான் வாழ்ந்துவந்த வாழைத்தோட்டம் நோக்கித் திரும்பியது. வாழைத்தோட்டம் அருகில் உள்ள குறும்பர் பள்ளம் பகுதிக்கு ரிவால்டோ திரும்பியது. அப்பகுதியில் வனத்துறையினர் அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
12 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த இந்த யானை, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட சூழலில், 40 கி.மீ. தூரம் நடந்து, மீண்டும் அது நடமாடி வந்த கிராமத்துக்குத் திரும்பியுள்ளது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. யானையின் வருகை, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறையினர் இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு எடுத்துச் செல்வதா அல்லது அதே பகுதியில் விடுவதா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.