Published : 04 Aug 2021 03:27 PM
Last Updated : 04 Aug 2021 03:27 PM

ஒரே மையத்தில் 1 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை

மதுரை 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை 1 லட்சம் பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தமிழகத்தில் கரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொற்று நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்படும் தொந்தரவுகள் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

அதற்கு பலன் கிடைத்தாலும் பலர் இந்தத் தொற்றுக்கு இறப்பது கவலை அளிக்கிறது. அதனால், இந்தத் தொற்று நோயை முழுமையாகக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்படி நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு போடப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் இவற்றுடன் ஸ்புட்னிக் தடுப்பூசியும் கிடைக்கிறது.

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை, மாநகராட்சி நகர்புற அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், புறநகர் அரசு மருத்துவமனைகள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

ஆரம்பத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய தயக்கம் ஏற்பட்டிருந்தது. அதன்பிறகு விழிப்புணர்வு ஏற்பட்டு தற்போது பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட வந்தாலும் தடுப்பூசிக்கு இன்னும் பற்றாக்குறை நீடிக்கிறது.

ஒவ்வொரு மையத்திலும் மக்கள் நீண்ட வரிசையில் தடுப்பூசிக்காக காத்திருக்கும் நிலைதான் ஏற்படுகிறது. இதில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில் மாநகராட்சி இளங்கோவன் பள்ளியில் செயல்படும் தடுப்பூசி மையம், மாவட்டத்திலேயே மிகப்பெரிய தடுப்பூசி மையமாக திகழ்கிறது.

இந்த மையத்தில் ஆரம்பத்தில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அதனால், மக்கள் அதிகளவு குவிந்து நெரிசல் ஏற்பட்டதால் தினமும் 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டதால் தினமும் ஏராளமானோர் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர்.

அதன்பிறகு பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று தற்போது தினமும் தினமும் 1,000 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

அப்படியிருந்தும் தற்போதும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடையில்லாமல் தடுப்பூசி போட்ப்படுகிறது. 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் இருப்பு இருந்தாலே போடப்படுகிறது.

மேலும், கோவாக்சின் தடுப்பூசி பற்றாக்குறை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உள்ளது. அதனால், இந்தத் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்கள், இரண்டாவது டோஸ் போட முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையின் மாநகராட்சி இளங்கோவன் பள்ளி தடுப்பூசி மையம், இன்று ஒரு லட்சம் தடுப்பூசிகள் என்ற இலக்கை அடைந்துள்ளது. 1,00,000வது நபருக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சிக்கு மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர், கலந்து கொண்ட 1,00,000வது நபருக்கு தடுப்பூசி போடுவதைப் பார்வையிட்டார். அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x