Published : 04 Aug 2021 01:05 PM
Last Updated : 04 Aug 2021 01:05 PM

கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் விரைவில் கல்லூரிகள்: அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு: கோப்புப்படம்

சென்னை

கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் விரைவில் கல்லூரிகள் அமைக்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை, எழும்பூரில் இன்று (ஆக. 04) அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது:

"சென்னையில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அனைத்து வசதிகளுடன் கூடிய கல்லூரியை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்தப் பணியையும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட இருக்கிறோம்.

திருக்கோயிலுக்குச் சொந்தமான இடங்களை அப்படியே விட்டுவிடாமல், வணிக ரீதியாகவும் திருக்கோயிலுக்கு வருமானம் வந்து, அந்த வருமானத்தின் வாயிலாக கோயில்களைச் சிறந்த முறையில் பராமரிக்கவும், அறம் சார்ந்ததுதான் திருக்கோயில்கள், ஆன்மிகம் என்பதால், அறம் சார்ந்திருக்கும் கல்வியையும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுத்துத் தந்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாகத்தான் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் புதிதாகக் கல்லூரி அமையப்பெற இருக்கிறது. அப்படி, பல்வேறு இடங்களில் 3 கல்லூரிகள் அமைக்கப்படும். இன்னும் அதிகப்படியான கல்லூரிகளை அமைக்க வேண்டும் என எங்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் 1, 2, 3 என்று தர அடிப்படையில் நிறைய கல்லூரிகளை அமைக்கவிருக்கிறோம். கூடிய விரைவில் தமிழக முதல்வர் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோயில்களில் சிலைகள் திருட்டுச் சம்பவத்தில் இதுவரை 5 நிகழ்வுகளில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை ஆணையர், கூடுதல் ஆணையர் கோயில்களுக்குச் சென்று காணாமல் போன சிலைகளை 4 இடங்களில் கைப்பற்றியிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் 6 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறநிலையத்துறையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவும் இதற்காகச் செயல்பட்டு வருகிறது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவை நவீனப்படுத்த முதல்வர் அறிவுறுத்தலின்படி விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்".

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x