

சியாச்சின் பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வெலூர் போலீஸார் தரப்பில் கூறியதாவது:
இந்திய எல்லையில் உள்ள சியாச்சின் பனிப் பகுதியில் மெட்ராஸ் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3-ம் தேதி சியாச்சினில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதற்கிடையில், உயிரிழந்த ராணுவ வீரர்களில் ஒருவர் வேலூர் அடுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்று கூறப்படுகிறது. அவர் யார்? அவரது குடும்பத்தினர் குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
கிருஷ்ணகிரி வீரர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் பேரிகை அருகே குடிசாதனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நஞ்சகவுடு என்பவரது மகன் ராமமூர்த்தி (32) என்பவரும் பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ராமமூர்த்தி, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். இவருக்கும் சுனிதா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. குடிசாதனப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் ராமகிருஷ்ணா கூறும்போது, ’பனிச் சரிவில் சிக்கி ராமமூர்த்தி உயிரிழந்த சம்பவம் குடும்பத் தினர் மட்டுமின்றி கிராம மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி யுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.
மதுரை, தேனியை சேர்ந்தவர்கள்
இது தவிர தேனியைச் சேர்ந்த ஆனந்தன், மதுரை சொக்கத் தேவன்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்கிற ராணுவ வீரர்களும் பனிச் சரிவில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் விசாரித்ததில் இந்த இருவரின் உயிரிழப்பு தொடர்பாக எங்களுக்கு உறுதியான தகவல் எதுவும் வரவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.