மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு முக்கியத்துவம்: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதி

மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு முக்கியத்துவம்: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதி
Updated on
2 min read

மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

தாம்பரம் செங்கல்பட்டு இடையே ரூ.256 கோடி மதிப்பில் 3-வது அகல ரயில்பாதைக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு தாம்பரத்தில் நேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர், அவர் காணொலிகாட்சிகள் மூலம் சின்னசேலம் கள்ளக்குறிச்சி இடையே புதிய அகல ரயில்பாதை திட்டத்துக்கு (ரூ.116.6 கோடி மதிப்பில்) அடிக்கல் நாட்டினார். திருச்சி ரயில் நிலையத்தில் நகரும் மின்படிக்கட்டுகள் அமைக்கும் திட்டம் (ரூ.91 லட்சம்), சென்னை சென்ட்ரல் சாலிமார் சுவிதா ஏசி (வாராந்திர) விரைவு ரயில், தனிநபருக்கான படுக்கை விரிப்புகள் விற்பனை ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.

விழாவில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு பேசியதாவது:

ரயில்வேத் துறையில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளின் முதலீட்டை காட்டிலும், தற்போது தனியார் பங்களிப்புடன் அதிகளவில் முதலீடு செய்யப்படுகிறது. ரயில்வேத் துறையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி ரயில் பயணிகளுக்கு உயர்தர சேவை அளிப்பதோடு, பாதுகாப்பான பயணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தும் செயல்பட்டு வருகிறோம்.

கடந்த ரயில்வே பட்ஜெட்டின்போது, தமிழகத்துக்கு முந்தைய ஆண்டுகளை விட ஒன்றரை மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டது. இந்த முறையும் தமிழக ரயில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிதி ஒதுக்கப்படும்.

மாநில அரசுகளுடன் இணைந்து ரயில்வே திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் இணைந்து புதிய கூட்டு நிறுவனம் உருவாக்கப்படும். இதற்கு தமிழக அரசும் ஆதரவு தெரிவித்து, ரயில் திட்டங்களை செயல்படுத்த ஆர்வமாக இருக்கிறது. இதன்மூலம் தமிழ்நாடு வளர்ச்சியடையும்.

இவ்வாறு அவர் பேசினார். பேச்சை தொடங்கும்போது ‘வணக்கம்’ என்றும் முடிக்கும்போது ‘நன்றி’ என்றும் அமைச்சர் சுரேஷ் பிரபு தமிழில் கூறினார்.

தமிழக அமைச்சர் சின்னையா பேசுகையில், ‘‘சென்னை கன்னியாகுமரி வரையில் இரட்டை பாதை, மதுரை கோவை இடையே அதிவிரைவு பாதை, சென்னை பெங்களூர் இடையே அதிவிரைவு பாதை அமைப்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

திருச்சி சிவா எம்.பி பேசுகையில், ‘‘திருச்சி திருநெல்வேலி இன்டர்சிட்டி விரைவு ரயில் மணப்பாறையில் நிறுத்தி செல்ல வேண்டும், பொன்மலை ரயில் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும், பெங்களூர் திருச்சி இடையே இன்டர்சிட்டி விரைவு ரயில் இயக்க வேண்டும்’’ என்றார்.

இந்த விழாவில் எம்பிக்கள் கே.என்.ராமசந்திரன், மரகதம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோக்ரி மற்றும் ரயில்வே அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

தாம்பரம் - செங்கல்பட்டு 3-வது அகல ரயில் பாதை உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி சென்னை தாம்பரத்தில் நேற்று நடந்தது. இதில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, தமிழக அமைச்சர் டிகேஎம் சின்னையா, எம்.பி.க்கள் திருச்சி சிவா, கே.என்.ராமச்சந்திரன், மரகதம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோக்ரி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in