

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (45). பாமக பிரமுகரான இவர் அப்பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். திருபுவனம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நடந்த, மதமாற்ற நிகழ்வுகளை தட்டிக்கேட்டு வந்தார். இதுதொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
இந்நிலையில், 2019 பிப்ரவரி 5-ம் தேதி ராமலிங்கத்தை ஒரு அமைப்பினர் கொடூரமாக கொலை செய்தனர். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் திருவிடைமருதூர், கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 18 பேர் சதி திட்டம் தீட்டி ராமலிங்கத்தை கொலை செய்தது தெரியவந்தது. இவர்களில், 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மொத்தம், 18 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ராமலிங்கம் கொலைக்கு பின்னணி யில் பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 2019 மார்ச் மாதம் ராமலிங்கம் கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அதிகாரிகளின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இவர்கள் விசாரணை நடத்தி, திருவிடைமருதூர் தாலுகா, நடு முஸ்லீம் தெருவைச் சேர்ந்த ரெஹ்மான் சாதிக், திருபுவனம் வடக்கு முஸ்லீம் தெருமுகமது அலி ஜின்னா, கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தஅப்துல் மஜீத், பாபநாசம்,வஞ்சுவலி பள்ளிவாசல் தெருவைச்சேர்ந்த புர்ஹானுதீன், திருமங்கல குடியைச் சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் நபீல் ஹாசன் ஆகிய 6 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தனர்.
இவர்கள் பற்றி துப்பு கொடுத்தால், 1 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவித்தனர். சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றமும் ரெஹ்மான் சாதிக் உள்ளிட்ட 6 பேர் மீது பிடிவாரன்ட் பிறப்பித்தது.
இந்நிலையில், 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெஹ்மான் சாதிக்கை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். மீதம் உள்ள 5 பேர் பதுங்கி இருக்கும் இடத்தை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களையும் விரைவில் கைது செய்வோம் என என்ஐஏ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.