Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM

கீழடி ஆய்வு முடிவுகளை ஏற்பது போல் கடவுள் குறித்த சங்க பாடல்களை திமுக ஏற்க வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து

சேலம் / ஈரோடு

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, சங்ககிரி மலைக்கோட்டையில் தீரன் சின்னமலையின் உருவப்படத்துக்கு நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் அண்ணாமலை, கூறியதாவது: கர்நாடக அரசு மேகேதாட்டில் அணை கட்ட சட்டப்படி அனுமதி இல்லை. கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக பாஜக சார்பில் நாளை (5-ம் தேதி) தஞ்சாவூரில் உண்ணாவிரதபோராட்டம் நடக்கவுள்ளது. இதில், தமிழக பாஜக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பர். இப்போராட்டம் கர்நாடகா மக்களுக்கு எதிரானது அல்ல, கர்நாடகா அரசின் முடிவுக்கு எதிரான அறவழிப் போராட்டம் என்றார்.

இதேபோன்று, ஈரோடு அறச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு அவர் கூறியது:

1967-க்கு பிறகு வந்த அரசுகள், பாடப்புத்தகங்களில், சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழக தலைவர்களையும், தியாகிகளையும் மறைத்து வந்துள்ளன. அவர்களை நாங்கள் வெளிப்படுத்தி, போற்றி வருகிறோம்.

கீழடி அகழாய்வை பாஜக வரவேற்கிறது. கீழடி என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கீழடி ஆய்வு முடிவுகளை ஏற்கும் ஆட்சியாளர்கள், கடவுளைப் பற்றி பாடிய சங்க இலக்கியங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பாடத்திட்ட மறு ஆய்வு நடந்தபின்னர், 2020-ல் நடந்த நீட் தேர்வை எந்த விதத்தில் ஆய்வு செய்து பார்த்தாலும், சமூகநீதியைத் தாண்டி, நீட் வெற்றி பெற்றுள்ளது. எல்லா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். ஏ.கே. ராஜன் குழுவினர் குறிப்பிட்ட ஆண்டுகளின் தகவல்களை மட்டும் எடுத்துக் கொண்டு, நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களைக் கூறுகின்றனர்.

நீட் தேர்வுக்காக நன்றாகப் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை, நீட் வராது, படிக்காதீர்கள் என்று தேர்தலுக்காகக் கூறிவிட்டு, தற்போது 3 மாதத்தில் நீட் தேர்வுக்கு தயாராகுமாறு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகிறார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர், மேகே தாட்டுவில் அணைகட்ட தமிழக அரசிடம் எதற்காக கருத்து கேட்க வேண்டும் என்று சொல்கின்றனர். இதற்கு தமிழக காங்கிரஸார் பதில் சொல்ல வேண்டும்.

மத்திய அமைச்சர்களைச் சந்தித்த பின்னர், மேகேதாட்டுவில் அணை கட்டப்படாது என தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெளிவுபடுத்தியிருக்கிறார். தமிழகத்தின் மீதும், மக்கள் மீதும் பிரதமர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். தமிழகத்தின் எந்த உரிமையையும் மத்திய அரசு பறிக்கவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x