ரங்கநாதர் கோயில் சார்பில் ஸ்ரீரங்கத்தில் காவிரித் தாய்க்கு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கல்

ரங்கநாதர் கோயில் சார்பில் ஸ்ரீரங்கத்தில் காவிரித் தாய்க்கு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கல்
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் திருச்சி அம்மா மண்டபத்தில் காவிரித் தாய்க்கு நேற்று சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவரான நம்பெருமாள் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ம் நாள் அல்லது ஆடி 28-ம் நாளில் அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்னர் மாலையில் காவிரித் தாயாருக்கு மங்களப் பொருட்களை சீர்வரிசையாக அளிப்பார்.

ரங்கவிலாச மண்டபத்தில்

கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக.2,3 தேதிகளில் ஸ்ரீரங்கம், சமயபுரம், உறையூர், மலைக்கோட்டை, திருவானைக்காவல் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை.

இதன் காரணமாக நம்பெருமாள் அம்மா மண்டபத்துக்கு பதிலாக கோயில் வளாகத்தில் உள்ள ரங்கவிலாச மண்டபத்தில் நேற்று பிற்பகல் 3.15 மணிக்கு எழுந்தருளினார்.

பின்னர், அங்கிருந்தவாறே காவிரித் தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சியும், மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதன்பின், காவிரித் தாய்க்கு உரிய சீர்வரிசைப் பொருட்களை கோயில் அர்ச்சகர்கள் எடுத்துக் கொண்டு ராஜகோபுரம் வழியாக மேள தாளங்கள் முழங்க அம்மா மண்டபத்துக்கு வருகை தந்து காவிரித் தாய்க்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து நம்பெருமாள் மாலை மாற்றிக் கொண்டு இரவு 7 மணிக்கு ரங்கவிலாச மண்டபத்திலிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in