

அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 94 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான 463 புதிய பேருந்துகள், 39 புனரமைக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் மலைப்பிரதேசங்களுக்கான 7 சிற்றுந்துகளை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தில் போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், தமிழக அரசு புதிய பேருந்துகள் மற்றும் வழித்தடங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 87 பேருந்துகள்; விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 109 பேருந்துகள்; சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 34 பேருந்துகள்; கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 61 பேருந்துகள்; கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 109 பேருந்துகள்; மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 46 பேருந்துகள்; திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 17 பேருந்துகள், என 91 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 463 புதிய பேருந்துகள் மற்றும் 2 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட 39 பேருந்துகள்; மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு விரைவாக எளிதில் சென்று திரும்பும் வகையில் சிற்றுந்துகள் சேவையை புதியதாக ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, விழுப்புரம் கோட்டத்திற்கு 1 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 7 சிற்றுந்து சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்.
மொத்தம் 502 பேருந்துகள் மற்றும் 7 சிற்றுந்துகளை துவக்கி வைப்பதன் அடையாளமாக தலைமைச் செயலகத்தில் 7 ஓட்டுநர்களுக்கு பேருந்துகளுக்கான சாவிகளை வழங்கி, கொடியசைத்து பேருந்து மற்றும் சிற்றுந்து சேவைகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்' என்று அதில் தெரிவிக்கப்பட்டது.