

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத் தில் கடந்த 2013-ல் ஏற்பட்ட கலவரத்தில் பாமக தொண்டர் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த திண்டிவனம் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளித்தது.
கடந்த 2013 ஏப்ரல் 25-ம் தேதி வன்னியர் சங்கம் சார்பாக மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பெருவிழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான பாமகவினர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் சென்றனர். அப்போது மரக்காணம் அருகே பாமகவினருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பின்னர் கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் செல்வராஜ் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்த கலவரம் தொடர்பாக மரக்காணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் மரக்காணத்தைச் சேர்ந்த மணிகண்டன், ரகு, செந்தில்குமார், பாரிநாதன், ராஜூ, சேகர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
வழக்கு தொடர்பாக சுமார் 100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து 2013 செப்டம்பர் 5-ம் தேதி திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு, திண்டிவனம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.
இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதி செல்வ முத்துக்குமாரி நேற்று தீர்ப்பு வழங்கினார். குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பு வழங்குவதை முன்னிட்டு 6 பேரும் நீதிமன்றத்துக்கு அழைத் துவரப்பட்டனர். தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். மரக்காணம் கலவரம் தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட தையடுத்து நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மரக்காணம் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை திண்டிவனம் நீதிமன்றத்தில் இருந்து போலீஸார் அழைத்துச் செல்கின்றனர்.
நீதி கிடைத்துள்ளது: ராமதாஸ் வரவேற்பு
மரக்காணம் கலவரம் வழக்கில் நீதி கிடைத்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாமல்லபுரத்தில் 2013-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற்ற சித்திரைப் பெருநாள் விழாவில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த பாமக தொண்டர்கள் மீது, மரக்காணம் என்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய வன்முறை தாக்குதல் மற்றும் கலவரத்தில் செல்வராஜ், விவேக் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். செல்வராஜ் கொலை வழக்கை விசாரித்த திண்டிவனம் நீதிமன்றம், இதில் குற்றம்சாற்றப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. இதன்மூலம் அப்பாவி இளைஞர்கள் படுகொலைக்கு நீதி கிடைத்திருக்கிறது.
மரக்காணம் கலவரத்துக்கும் பாமகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தொடக்கம் முதலே கூறி வருகிறேன். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் உண்மை உலகுக்கு உணர்த்தப்பட்டுவிட்டது. செல்வ ராஜ் வழக்குபோலவே, விவேக் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 பேரும் அப்பாவிகள்: திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை: பாமகவினர் இறந்ததற்கு விபத்து தான் காரணம் முதலில் அறிவித்தது தமிழக அரசு. பின்னர் அரசு காட்டிய மெத்தனத்தால் விசாரணை திசை மாறியது. இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் வி.சி.க. உறுப்பினர்கள் அல்ல. அந்த கிராமத்தைச் சேர்ந்த அப்பாவிகள் தான். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.