

வேறு ஒருவரின் வீட்டை தனது வீடு என்று கூறி குத்தகைக்கு விட்டு, ரூ.79 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
மந்தைவெளியைச் சேர்ந்தவர் செல்வரசு. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:
மந்தைவெளியைச் சேர்ந்த உமாபதி என்பவரிடம் குத்தகை ஒப்பந்தம் போட்டு, மந்தைவெளி வேலாயுதம் தெருவில் உள்ள 10 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி வீட்டில் நான் உட்பட 9 பேர் தலா ரூ.9 லட்சம் வீதம் பணம் கொடுத்து வசித்து வந்தோம். இந்நிலையில், கடன் விவகாரம் தொடர்பாக அந்த அடுக்குமாடி வீடு சீல் வைக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த நாங்கள் இதுகுறித்து எங்களிடம் குத்தகை பணம் பெற்ற உமாபதியிடம் முறையிட்டோம். அதன் பின்னர்தான் வேறு ஒரு குடும்பத்தினருக்கு சொந்தமான வீட்டை தனக்கு சொந்தமான வீடு என கூறி மொத்தம் ரூ.79 லட்சத்து 85 ஆயிரம் பெற்று அவர் மோசடி செய்தது தெரியவந்தது.
வேறு ஒரு குடும்பத்துக்கு சொந்தமான வீட்டை தனது வீடு என கூறி பணம் பெற்று மோசடி செய்த உமாபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது பணத்தை அவர் திருப்பித் தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், செல்வரசு குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த உமா பதியை பள்ளி கரணையில் வைத்து போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.