

புதுக்கோட்டை அருகே தொகுதியில் உள்ள வாக்காளர்களை கவர்வதற்காக குடும்ப விழாவுக்கு 80,000 அழைப்பிதழ்கள் விநியோகித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார் பாமக நிர்வாகி.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் சுப.அருள்மணி. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராக உள்ள இவர் கட்சியின் தலைமையிடத்த்துக்கு மிகவும் நெருக்கமானவர்.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்ட அருள்மணி, அதிமுக வேட்பாளரிடம் சுமார் 5,127 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அந்தக் கட்சியிலிருந்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்காதபோதிலும் கடந்த சில மாதங்களாக கட்சியினருடன் வாக்குச் சேகரிப்பு பணியில் அருள்மணி ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கீரமங்கலத்தில் இன்று (பிப்ரவரி 7) அருள்மணியின் குழந்தைகளுக்கு காதணி விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விழாவில் கலந்துகொள்ளச் செய்வதற்காக ஆலங்குடி தொகுதியெங்கும் சுமார் 80,000 அழைப்பிதழ்களை உறவினர்கள் மற்றும் கட்சியினருக்கு விநியோகித்துள்ளார். இவ்வாறு அதிகளவில் அழைப்பிதழ் அச்சடித்து குடும்ப விழா நடத்துவது தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்கான நூதன நடவடிக்கை என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பாமக புதுக்கோட்டை மாவட்ட கொள்கை விளக்கச் செயலாளர் டி.ராஜகுமாரன் கூறியபோது, “கடந்த தேர்தலில் அருள்மணி தோற்றாலும் தொடர்ந்து கட்சியைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவர் மீண்டும் ஆலங்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். காதணி விழாவுக்கு தொகுதியைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்பதற்காகவே 80,000 அழைப்பிதழ்களை அச்சடித்து விநி யோகித்துள்ளோம்” என்றார்.
இதுகுறித்து வாக்காளர் ஆலங்குடி செல்வம் கூறியபோது, “ஆலங்குடி தொகுதியில் கடந்த 6 மாதங்களாக அருள்மணியை முன்னிறுத்தி பாமகவினர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதுவரை இப்பகுதியில் யாரும் குடும்ப விழாவுக்காக இவ்வளவு அழைப்பிதழை அச்சடித்துக் கொடுத்ததில்லை. தேர்தலை முன்வைத்தே இவ்வாறு செய்யப்படுகிறது. இத்தொகுதிக்கு யார் எம்எல்ஏ-வாக வேண்டுமென மக்கள் தீர்மானிப்பார்கள்” என்றார்.
வாக்காளர் அணவயலைச் சேர்ந்த சுந்தரி கூறியபோது, “தேர்தல் தேதி அறிவித்த பிறகு இப்படி விழா நடத்த முடியாது. மீறி நடத்தினால் அதற்கான செலவுத் தொகை தேர்தல் செலவுக் கணக்கில் சேர்ந்துவிடும். மேலும், தேர்தல் அலுவலர்களின் கெடுபிடிகள் அதிகமிருக்கும் என்பதால் திட்டமிட்டு முன்கூட்டியே வாக்காளர்களை கவர்வதற்காக இந்த விழாவை நடத்துகின்றனர்” என்றார்.