

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
’’நீலப்புலிகள் அமைப்பினர் 2019-ல் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது, பேரரசர் ராஜராஜசோழன் வரலாறு தொடர்பாக சில கருத்துகளைத் தெரிவித்தேன். டெல்டா மாவட்டங்களில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து உமர்ஃபரூக் எழுதிய ’செந்தமிழ் நாட்டு சேரிகள்’ என்ற புத்தகத்தில் இடம் பெற்றிருந்ததைப் பேசினேன்.
இந்தக் கருத்துகளை உள்நோக்கத்துடன் பேசவில்லை. என் கருத்து எந்தச் சமூகத்துக்கும் எதிராக அமையவில்லை. இருப்பினும் என் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
பின்னர், மனுதாரர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறி அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.