Published : 03 Aug 2021 07:23 PM
Last Updated : 03 Aug 2021 07:23 PM

பாதுகாப்பில்லாமல் 3 லட்சம் நெல்மூட்டைகள் குவிப்பு: கிடங்குடன் நவீன அரிசி ஆலை தொடங்கக் கோரிக்கை

கோடம்பாக்கம் கிராமத்தில் திறந்தவெளியில் குவிக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளில், மழை காரணமாக பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது

அரக்கோணம்

அரக்கோணம் அருகேயுள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் சுமார் 3 லட்சம் நெல் மூட்டைகள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், நெமிலி அருகே 32 ஏக்கரில் சேமிப்புக் கிடங்குடன் நவீன அரிசி அரவை ஆலை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி, கலவை, ஆற்காடு, அரக்கோணம் தாலுகா மற்றும் வாலாஜா, சோளிங்கர் தாலுகாவின் சில பகுதிகளில் நெற்பயிர் சாகுபடி நடைபெறுகிறது. சம்பா, நவரை, சொர்ணவாரி என மூன்று பருவ நெல் சாகுபடியும் விளைச்சல் உள்ள பகுதி என்பதால் அரசு சார்பில் அனைத்து தாலுகாவிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அரக்கோணம், நெமிலி, வாலாஜா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் நெல் மூட்டைகள் சேமிக்கப்பட்டு அரிசி அரவை ஆலைகள் மூலமாக அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில் தேங்கியுள்ளன. இதில், அரக்கோணம் மகேந்திரவாடி அடுத்துள்ள கோடம்பாக்கம் கிராமத்தில் தனியார் நிலத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் திறந்தவெளி சேமிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மட்டும் சுமார் 3 லட்சம் நெல் மூட்டைகளைத் தனித்தனியாக அடுக்கி, தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர். பாதுகாப்பற்ற முறையில் சேமிக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் நனைந்து வீணாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

கொள்முதல் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 போகம் நெல் விளைந்தாலும் 2 போகம் நெல்லை மட்டும் அரசு கொள்முதல் செய்து வருகிறது. இதனால், ஒரு போகம் நெல்லை விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதில், அரசு கவனம் செலுத்தி 3 போகம் நெல்லையும் கொள்முதல் செய்யும் அளவுக்கு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளைக் கட்டமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வேப்பேரியில் 32 ஏக்கர் நிலம்

நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட வேப்பேரி பகுதியில் 32 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் அடையாளம் காணப்பட்டது. இங்கு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், அரசின் அலட்சியத்தால் தற்காலிக நெல் சேமிப்பு நிலையத்தில் மட்டும் 3 லட்சம் நெல் மூட்டைகள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்துத் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ஒவ்வொரு முறையும் நெல் சேமிப்புக் கிடங்கு குறித்த அறிவிப்பு டெல்டா மாவட்டங்களுக்கே செல்கிறது. ராணிப்பேட்டையிலும் மூன்று போகம் நெல் விளைகிறது என்பதை அரசு கவனிக்க வேண்டும். கோடம்பாக்கம் கிராமத்தில் கருங்கல் மீது மரக்கட்டைகள் வைத்து அதன் மீது நெல் மூட்டைகளை அடுக்கி ‘கேப்’ முறையில் தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.

இதனால், மழை அதிகமாகத் தேங்கும்போது நெல் மூட்டைகள் பாதிக்கப்படும். எனவே, வேப்பேரி கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட 32 ஏக்கர் நிலத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குடன் நவீன அரிசி அரவை ஆலை அமைக்க வேண்டும். அப்படி அமைந்தால் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து 3 போகம் நெல்லையும் கொள்முதல் செய்ய முடியும், நெல் மூட்டைகளையும் பாதுகாக்க முடியும். அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்கும்’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x