

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே வலுப்பெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில், போளூர் பேரூராட்சியானது பரப்பளவில் பெரியதாகும். 1946-ல் இரண்டாம் நிலைப் பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் வரி வருவாய் அடிப்படையில், 1969-ல் தேர்வு நிலைப் பேரூராட்சி மற்றும் 2012-ல் சிறப்பு நிலைப் பேரூராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 18 வார்டுகள் அமைந்துள்ளன. ‘போளூர்‘ என்ற பெயரில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்து வருகிறது.
2011-ல் நடைபெற்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 13,862 ஆண்கள் மற்றும் 14,261 பெண்கள் என மொத்தம் 28,123 பேர் உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இன்னும் அதிகரித்திருக்கும் எனப் போளூர் மக்கள் கூறுகின்றனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, ''10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கரோனா தொற்றுப் பரவலால் தடைப்பட்டுள்ளது. இல்லையென்றால், போளூர் பேரூராட்சியின் மக்கள்தொகை, 30 ஆயிரத்தைக் கடந்தது எனப் புள்ளிவிவரம் மூலம் தெரிந்திருக்கும். இதேபோல், போளூர் பேரூராட்சியின் வரி வருவாயும் ரூ.1 கோடியைக் கடந்துள்ளது'' என்று தெரிவித்தனர்.
மக்கள்தொகை மற்றும் வரி வருவாய் உயர்வு எதிரொலியாக, போளூர் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
இதுகுறித்துப் பொதுமக்கள் கூறும்போது, ''ரயில் மற்றும் பேருந்து வழித்தடங்கள் உள்ள நகரமாக போளூர் உள்ளது. மக்கள்தொகை மற்றும் வரி வருவாயிலும் பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது. போளூர் நகரப் பகுதி, கடந்த 10 ஆண்டுகளாக விரிவடைந்து வருகிறது. போளூருக்குப் புறவழிச் சாலை வந்ததால், கிழக்கே வெண்மணி வரையும், வடக்கே குன்னத்தூர் வரையும், தெற்கே வசூர் வரையும் வளர்ந்துள்ளது. வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகரித்துள்ளன.
நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டால், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உட்கட்டமைப்புகள் மற்றும் அடிப்படை வசதிகளை விரைவாகச் செய்து கொடுக்க முடியும். சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், போளூர் பேரூராட்சியானது, நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது என்ற அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம். அதே நேரத்தில் நகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும்போது, வரி வருவாயைப் பெருக்க, வரிவிதிப்பை அதிகரித்து, மக்கள் தலையில் சுமையை ஏற்றக் கூடாது'' என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.