Published : 03 Aug 2021 06:29 PM
Last Updated : 03 Aug 2021 06:29 PM

இம்மாதத்துக்கு மட்டும் 79 லட்சம் கரோனா தடுப்பூசிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கோப்புப்படம்

சென்னை

ஆகஸ்ட் மாதத்துக்கு மட்டும் அரசுக்கும் தனியாருக்கும் சேர்த்து 79 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வரவுள்ளன என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (ஆக. 03) அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பது ஊகம் என, எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான கரோனா சிகிச்சை சிறப்பு வார்டு ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டார். ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கென தனி சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீவிர கரோனா சிகிச்சை மையங்களும் குழந்தைகளுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மூன்றாவது அலை குறித்த தாக்கத்தை முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளரும் 'டாஸ்க் ஃபோர்ஸ்' கமிட்டியின் தலைவருமான பூர்ணலிங்கம் தொடர்ந்து சொல்லி வருகிறார். அந்தக் குழு தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. அவர்களின் கருத்துகளும் கேட்கப்பெற்றுத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் இரண்டு நாட்கள் தொற்றின் அளவு 100 என்ற அளவில் கூடியது. இதை அறிந்தவுடன் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் சொன்னார். இதையடுத்து, நானும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் ஆய்வு செய்து 13 நிமிடங்களிலேயே ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை முடிவு தரும் மையத்துக்கும் அனுமதியளித்து, கேரளாவிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை அவசியம் என்பதை வலியுறுத்தி, அந்தப் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நாளை மறுநாளிலிருந்து இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தப்படும். மாவட்ட எல்லைகளில் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. இப்படி மூன்றாவது அலை ஏற்படாமல் தடுப்பதற்கும், வந்தால் அதனை எதிர்கொள்வதற்குமான நடவடிக்கைகள் வெகு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொற்றின் எண்ணிக்கை அண்டை மாநிலங்களில் எவ்வளவு இருக்கிறது எனப் பார்க்கிறோம். தினமும் 20,000 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை இருப்பதால், கேரளப் பயணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்திருக்கிறது. தமிழகத்திலும் தொற்று விகிதம் 1.2% என்றளவில்தான் இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை சென்னையில் 82 சதவீதமும், விருதுநகரில் 82 சதவீதமும், பல்வேறு மாவட்டங்களில் 60-70% என்ற அளவில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதோ, அந்த மாவட்டங்களுக்குக் கூடுதல் தடுப்பூசிகளை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நேற்றிலிருந்து அந்தந்த மாவட்டங்களுக்குக் கூடுதல் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரையில் பெரும்பாலான மாவட்டங்களில் 60-70 சதவீதத்தைக் கடந்த நிலையில், ஈரோடு 37%, கோயம்புத்தூர் 43%, திருப்பத்தூர் 46% என்ற நிலை உள்ளது. இந்த மாவட்டங்களுக்குக் கூடுதலாகத் தடுப்பூசிகள் அனுப்பும் பணிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தடுப்பூசியும் தட்டுப்பாடு இல்லாமல் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதுவரை 2 கோடியே 25 லட்சத்து 33,760 தடுப்பூசிகள் அரசுக்கு வரப்பெற்று, 2 கோடியே 18 லட்சத்து 31 ஆயிரத்து 183 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நேற்று இரவு வரை, கையிருப்பில் 12 லட்சத்து 45 ஆயிரத்து 957 தடுப்பூசிகள் உள்ளன.

தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை 19 லட்சத்து 47 ஆயிரத்து 380 தடுப்பூசிகள் வரப்பெற்று, 15 லட்சத்து 80 ஆயிரத்து 885 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 495 தடுப்பூசிகள் இருக்கின்றன.

அரசின் சார்பிலும் தனியார் மருத்துவமனைகளின் சார்பிலும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, 2 கோடியே 34 லட்சத்து 12 ஆயிரத்து 68 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது. எனவே, கையில் இப்போது 12 லட்சம் அளவுக்குத் தடுப்பூசி இருப்பதால், ஜூலை மாதத்துக்கான மத்திய அரசின் தொகுப்பாக தடுப்பூசிகள் வரத் தொடங்கியுள்ளன.

நேற்று 3 லட்சம் தடுப்பூசிகள், நேற்று முன்தினம் ஒன்றரை லட்சம் தடுப்பூசிகள் என, இந்த மாதத்துக்கு மட்டும் அரசுக்கும் தனியாருக்கும் சேர்த்து 79 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளன. இவற்றில் 17 லட்சம் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கும், மீதமுள்ள தடுப்பூசிகள் அரசுக்கும் வரவுள்ளன.

3-ம் தேதிக்குள் இரு முறை தடுப்பூசிகள் வந்துள்ளன. கையிருப்பும் உள்ளது. தொடர்ந்து தடுப்பூசிகள் வரும். எங்கும் பிரச்சினை இல்லாமல், தடுப்பூசி போடும் பணிகள் நிறைவாகவே சென்று கொண்டிருக்கிறது.

நேற்று 3 லட்சத்து 73 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன. எங்கே எல்லாம், முதல் தடுப்பூசி போடப்பட்டு, இரண்டாம் தடுப்பூசிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்களோ, அதையறிந்து அனுப்புகின்ற பணியை நிர்வாகம் செய்திருக்கிறது. எனவே, கோவாக்சினுக்கும் தட்டுப்பாடு இல்லை. கோவாக்சின் முதல் தவணைக்குப் புதிதாக விரும்புபவர்களுக்குத்தான் கிடைக்காதே தவிர, ஏற்கெனவே செலுத்தியவர்களுக்கு இரண்டாம் தவணை தேவைப்படுவோருக்குச் செலுத்தப்படுகிறது.

நாளை மறுநாள் காலை (ஆக. 05) கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப் பள்ளியில் 'மக்களைத் தேடி மருத்துவம்' எனும் மகத்தான திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். உலகத்திலேயே முதன்முறையாக ஒட்டுமொத்த மக்களையும் ஸ்க்ரீன் செய்து, அந்த மக்களுக்கு மருத்துவத்தை நேரடியாக வீடுகளுக்கே சென்று சேர்த்து, மருந்து, மாத்திரைகள் மட்டுமல்லாமல், மருத்துவ சேவையையும் வீடுகள்தோறும் தேடிச் சென்று சேர்க்கும் மகத்தான திட்டம் இது. வீடு, வீடாக யாருக்கெல்லாம் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் இருக்கிறதோ, நேரடியாக மருந்துகள் அளிப்பதைக் கண்காணிக்கவுள்ளார்.

வைரஸ் உருமாற்றம் பெற்றிருக்குமா என்பதைக் கண்டறிய, அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மாதிரிகளைச் சேகரித்து பெங்களூருவுக்குப் பரிசோதனைக்காக அனுப்பப்படுகிறது. உத்திரமேரூரில் ஒட்டுமொத்தமாக 40 குழந்தைகள் பாதிக்கப்பட்டபோது, அந்தக் குழந்தைகளின் மாதிரிகளை எடுத்து அனுப்பியதில், 32 குழந்தைகளுக்கு டெல்டா வைரஸ் தாக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கிறோம். அவர்கள் மிக நன்றாக இருக்கின்றனர்.

ஏற்கெனவே டெல்டா பிளஸைப் பொறுத்தவரையில், 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒருவர் மதுரையில் ஏற்கெனவே இறந்தவர். 9 பேரும், அவர்களைச் சார்ந்தவர்களும் நன்றாக இருக்கின்றனர்.

டெல்டா வைரஸ் தொடர்பான ஆய்வுகளை இங்கேயே மேற்கொள்வதற்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே இயங்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மையத்தை டெல்டா வைரஸ் ஆய்வகமாக மாற்றுவதற்கான பணிகளும் நடைபெறுகின்றன".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x