சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை: கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை: கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

திருமணம் செய்துகொள்வதாகக் கூறிச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த சிக்கதாசம்பாளையம், இடையளர்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (20). இவரும் 17 வயதுச் சிறுமி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்து கடைக்குச் சென்றுவருவதாகக் கூறிச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது தந்தை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில், மகளைக் காணவில்லை என 2019, மே 7-ம் தேதி புகார் அளித்தார்.

அதைத் தொடர்ந்து மே 21-ம் தேதி சிறுமியை போலீஸார் மீட்டனர். அப்போது, தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கார்த்திக் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் திருமணம் செய்துகொண்டதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, கார்த்திக் மீது ஆள்கடத்தல், குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டம் (போக்சோ) ஆகியவற்றின் கீழ் மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, கோவையில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிவடைந்து நீதிபதி ஏ.எஸ்.ரவி இன்று (ஆக.3) தீர்ப்பளித்தார். அதில், கார்த்திக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, நேரில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in