

கோவைக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, ஆளுநர், அமைச்சர்கள் , அதிகாரிகள் வரவேற்றனர்.
தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் பேரவை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கில், நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கிய, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆக. 3) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சூலூர் விமானப் படைத் தளத்துக்கு வந்தார்.
அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு (தொழில்துறை), முத்துசாமி (வீட்டுவசதித்துறை), வெள்ளகோவில் சாமிநாதன் (செய்தி தொடர்புத்துறை ), கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலத்துறை) மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், வருவாய்த்துறைச் செயலர் குமார் ஜெயந்த், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காலை 11.05 மணிக்கு சூலூர் விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட குடியரசுத் தலைவர் காலை 11.55 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தீட்டுக்கல் பகுதிக்குச் சென்றடைந்தார். அங்கு 3 நாட்கள் அவர் தங்கி ஓய்வு எடுக்கிறார்.