Last Updated : 03 Aug, 2021 12:37 PM

 

Published : 03 Aug 2021 12:37 PM
Last Updated : 03 Aug 2021 12:37 PM

புதுச்சேரியில் அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவோம்: ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி கூட்டாக உறுதி

புதுச்சேரி

புதுச்சேரியில் அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கூட்டாக அரசு விழாவில் அறிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் 75-வது சுதந்திர தினத் திருநாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்னும் 75,000 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா பாகூர் கொம்யூனில் உள்ள மணப்பட்டு கிராமத்தில் இன்று நடைபெற்றது.

மணப்பட்டு வனத்துறை தோட்டத்தளத்தில், மரம் நடும் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழசை, முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் உட்பட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்க நாட்டு மரங்களை நட்டு வைத்தனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசுகையில், "ஆடிப்பெருக்கில் மரம் நடுவிழா நடக்க வேண்டும் என்று விரும்பினேன். இன்று விதை விதைத்தால் நன்றாக விளையும். ஆடிப்பெருக்கில் மரம் நட்டுள்ளோம். காலியிடங்களில் மரம் நடுவதுடன், காலிப் பணியிடங்களை நிரப்புவோம். நான் தெலங்கானா ஆளுநராக இருந்தபோது, கூடுதல் பொறுப்பாக இங்கு புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டது, ஆண்டவரும், ஆண்டு வருபவரும் தந்த மிகப்பெரிய வாய்ப்பு.

தெலுங்கு பேசும் மண்ணில் ஆளுநர் என்பது இந்தியத் திருநாட்டில் ஒரு பகுதி. அதே நேரத்தில் தமிழ் பேசும் மண்ணில், தமிழில் உரையாற்றுவதோடு, தமிழில் பதவியேற்று, தமிழில் மக்கள் பிரதிநிதிகளைப் பதவியேற்க வைக்க இப்பொறுப்பு வாய்ப்பாக அமைந்தது. நான் படிக்கும் காலத்தில் வந்தபோது புதுச்சேரி பசுமையாக இருந்தது. தற்போது பொறுப்பேற்றுள்ள சூழலில் வெறுமையாகவும், காய்ந்துபோன சூழலிலும் உள்ளது. அதை மாற்றிப் பசுமையாக்க வேண்டும்.

முதல்வருக்கு நாளை பிறந்த நாள். அவர் நாளை ஊரில் இல்லாததால் தற்போதே சகோதரியாக வாழ்த்து தெரிவிக்கிறேன். பனைபோல் வாழுங்கள் என்று எனது தந்தை வாழ்த்துவார். ஏனெனில் பனை 120 ஆண்டுகளுக்கு மேல் வாழும்" என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசும்போது, "புதுச்சேரி மாநிலம் பசுமையாக இருக்கவேண்டும் என ஆளுநர் விருப்பப்படுகிறார். தெலங்கானாவை அடிக்கடி சுட்டிக்காட்டுவார். அங்குபோல் புதுச்சேரியை பசுமையாக்க விரும்புகிறார். வறட்சியாக ஏன் புதுச்சேரி இருக்கிறது என்றும், பராமரிப்பில்லை என்றும் குறிப்பிட்டார். அது உண்மை. பசுமையாகப் புதுச்சேரியை உருவாக்க விரும்பி மரக்கன்றுகள் நட்டுள்ளோம். இன்னும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுப் புதுச்சேரியை உருவாக்குவோம்.

இது சுற்றுலாப் பகுதி. சுற்றுலாப் பயணிகள் வர விரும்பும் இடம். சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விரைவில் சுற்றுலாத் தலமாகும். இங்கு மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான சிறிய குழப்பம் விவசாயிகளிடம் இருக்கிறது. பாதிப்பு ஏற்படாத வகையில் மீன்பிடித் துறைமுகம் தொடர்பான விசயத்தில் அரசு செயல்படும். அதைச் சரிசெய்வோம்.

அரசுத் துறைகளில் பல பணிகள் நிரப்பப்படாமல் உள்ளன. பத்தாயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. சரியாக நிரப்பப்படவில்லை. இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். வேலை தரவேண்டும். அரசுப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும். சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத தனியார் தொழிற்சாலைகள் வர சுமுகமான நல்ல சூழலை அரசு உருவாக்கும். அதற்கான முயற்சியை எடுப்போம். தொழில் வல்லுநர்களை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுப்போம். சிறந்த மாநிலமாகப் புதுச்சேரியைக் கொண்டுவர ஆளுநருக்கும் விருப்பம். ஆளுநர் ஒத்துழைப்புடன் புதுச்சேரியைச் சிறந்த மாநிலமாக்குவோம்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x