

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது விழாப்பேருரையின் தொடக்கத்தில்,‘‘இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலைஞர் மு.கருணாநிதியின் திருவுருவப் படத்தை திறந்து வைப்பதில்மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையில் இது ஒரு முக்கியத்துவம் மிக்கநாள்’’ என்று தமிழில் பேசினார். ‘மந்திரம் கற்போம் வினைத் தந்திரம்கற்போம், வானையளப்போம், கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம், சந்தித்தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம்’ என்று பாரதியின் கவிதைகளையும் தமிழில் வாசித்தார்.
சட்டப்பேரவை நூற்றாண்டு விழா, கருணாநிதி படத்திறப்பு விழா என இரண்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விழாவை அதிமுக புறக்கணித்துவிட்டது. இருப்பினும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தமாகா கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். சட்டப்பேரவை முன்னாள் தலைவர்கள் சேடப்பட்டி முத்தையா, ஆவுடையப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அமரும் வரிசையில் கூட்டணி, எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், பின்புறம் எம்பிக்கள், கூட்டணி கட்சி எம்பிக்கள் அமர்ந்திருந்தனர். ஆளுங்கட்சி வரிசையில் முதலில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அமர்ந்திருந்தனர். மேல் மாடத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் அமர்ந்திருந்தனர்.
விழாவையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘நூறு ஆண்டுகளுக்கு முன்பு வகுப்புவாரி இடஒதுக்கீடு அறிமுகமான சட்டப்பேரவையில் சமூக நீதிக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கிறது. சமூக நீதிக்கு சோதனை வரும்போதெல்லாம் நாட்டை வழிநடத்த வேண்டிய வரலாற்றுக் கடமையை, தந்தை பெரியார் காட்டிய வழியில் தொடர்ந்து செய்திடுவோம்!’ என்று தெரிவித்துள்ளார்