

குடியரசுத் தலைவர் இன்று உதகை வருவதை முன்னிட்டு போலீஸார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆக.3) மதியம் 12.15 மணிக்கு கோவை சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை தீட்டுக்கல் தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் ராஜ்பவன் செல்கிறார். நாளை காலை 10.20 மணிக்கு வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பகல் 12 மணிக்கு உதகை ராஜ்பவனுக்கு திரும்புகிறார். அங்கு தங்கி ஓய்வெடுக்கும் அவர், வரும் 6-ம் தேதி காலை 10.30 மணிக்கு உதகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்று, விமானத்தில் டெல்லி செல்கிறார்.
இதையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக 9 மாவட்டங்களில் இருந்து 1,300 காவலர்கள் உதகைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து ராஜ்பவன் வரையிலும், ராஜ்பவனில் இருந்து வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையம் வரையிலும் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் ஆகியோர் தலைமை வகித்தனர். அப்போது, உதகை நகர் முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
‘ட்ரோன்’ பறக்க தடை
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி சூலூர் விமானப் படை தளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 6-ம் தேதி வரை ‘ட்ரோன்’ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவித்துள்ளார்.